IPL 2025: சிஎஸ்கே-வில் தோனிக்கே இதுதான் கதி.. சம்பளத்தில் கையை வைக்கப் போகும் நிர்வாகம்
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி நிச்சயமாக தக்க வைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருக்கான சம்பளத்தை சிஎஸ்கே அணி குறைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது குறித்து பார்க்கலாம். 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஐபிஎல் விதிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ளது.
அதன்படி 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்ற விதியையும் பிசிசிஐ வெளியிட உள்ளது. குறைந்தபட்சம் 4 வீரர்களில் இருந்து அதிகபட்ச 6 வீரர்கள் வரை ஒரு அணி தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

நான்கு வீரர்களோ, ஆறு வீரர்களோ, எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என விதி அறிவிக்கப்பட்டாலும் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயமாக தக்க வைக்கும் என அந்த அணியின் நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது சம்பளம் வெகுவாக குறைய உள்ளது.
சிஎஸ்கே அணியில் தோனியின் சம்பளம் தற்போது 12 கோடி ரூபாயாக உள்ளது. தோனி 2025 ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரராக சில போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதனால், வேறு விக்கெட் கீப்பரை அடையாளம் காண வேண்டிய நிலையில் உள்ளது சிஎஸ்கே அணி கூடுதல் வீரர்களை வாங்க வேண்டும் என்றால் அதிக தொகை கையில் இருக்க வேண்டும்.
அதனால், தோனியை 12 கோடி சம்பளத்துக்கு தக்க வைத்தால் ஏலத்தில் வேறு வீரர்களை வாங்குவதில் சிரமம் ஏற்படலாம். அதனால், இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கான "அன்கேப்டு" (Uncapped) பிரிவின் கீழ் தோனியை தக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அன்கேப்டு வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்கு அதிகபட்ச சம்பளமாக 4 கோடி வரை அளிக்கலாம் என இதற்கு முன் ஐபிஎல் விதியில் கூறப்பட்டுள்ளது.
அது இந்த ஆண்டு ஐந்து கோடியாக அதிகரிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.. அதன்படி பார்த்தால் தோனிக்கு அதிகபட்சமாக 5 கோடி என்ற சம்பளத்தை அளித்து சிஎஸ்கே அவரை தக்க வைக்கும். தோனி முழு நேரமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் அவரை அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணி தக்கவைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications