மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலக இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் அல்லது துணை கேப்டன் என்ற நிலையில் இருக்கும் ஒரு வீரர் தான் தங்கள் அணியின் கேப்டனாகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
அதற்காகவே 2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியது. அப்போது ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டன் ஆகப் போகிறார் என்ற ஒரு பேச்சு அடிபட்டது. அதனால், அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு மாற்றம் செய்து கொண்டது. அதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கணிப்பு தவறானது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்தியனின் கேப்டனாக ரோஹித் சர்மாவே நீடித்தார். அது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு முதல் அடியாக விழுந்தது. ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் இனி எப்படியும் ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எண்ணியது.
ஆனால், தற்போது அதற்கு மாறாக அதே மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது இரண்டாவது அடியாக விழுந்துள்ளது. சூர்யகுமார் யாதவை மும்பை அணியின் கேப்டன் ஆக்கலாம் என சிலர் கூறினாலும், அதற்கான சாத்தியங்கள் குறைந்து கொண்டு வருகின்றன. சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வேறு அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ரோஹித் சர்மா அணியில் இருக்கும் போதே ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆக்கியதை சூர்யகுமார் விரும்பவில்லை என தெரிகிறது. அதனால், அப்போது அவர் அதிருப்தியில் இருந்தார். தற்போது அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டு விட்டது. 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்க ஒவ்வொரு அணியும் பெரிய அளவில் போட்டி போடும் என்பதால் அதை பயன்படுத்த அவர் முடிவு செய்துவிட்டார் என கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவை வரவழைக்க சுமார் நூறு கோடி ரூபாயை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கொடுத்து இருப்பதாக சொல்லப்படுவதால், அந்த பணமும் நஷ்டம் ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரை லாப நஷ்டத்திற்காக அந்த அணி நடத்தப்படவில்லை. புகழ் மற்றும் வெற்றிகளுக்காகவே அந்த அணி நடத்தப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்திய அணியின் கேப்டன் என நம்பி ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய அளவில் செலவு செய்ததால் அந்த திட்டம் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.