“ஒரு பந்தை கூட அடிக்க முடியலை” நிதிஷ் குமார் வெறிச்செயல்.. SRH vs LSG போட்டியில் நடந்தது என்ன?
ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னால் அதிரடியாக விளையாட முடியவில்லை என்ற கோபத்தில் நிதிஷ் குமார் ரெட்டி செய்த செயல் ரசிகர்களை உறைந்து போக வைத்தது. ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் ஷர்மா 6 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வந்தார். நிதிஷ் குமார் ரெட்டி நான்காம் வரிசையில் இறங்கினார். மூன்றாவது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வந்த நிதிஷ் குமார் ரெட்டியால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

நிதிஷ் குமார் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறினார். ஃப்ரீ ஹிட்டின் போதுகூட அவரால் 30-யார்டு வட்டத்தை தாண்டி பந்தை அடிக்க முடியவில்லை. இதை அடுத்து தன் மீது தானே அதிருப்தியில் இருந்தார். 28 பந்துகளில் 32 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் நிதிஷ் குமார் பவுல்ட் அவுட் ஆனார். அவரது இன்னிங்ஸில் மொத்தம் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். ஆட்டமிழந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறிச் சென்ற நிதிஷ் குமார், வீரர்கள் ஓய்வறைக்குச் செல்லும் படிக்கட்டு அருகே சென்றபோது தனது ஹெல்மெட்டை படிக்கட்டில் தூக்கி எறிந்தார்.
அந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகின. இதை அடுத்து நேரலையில் அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இதுபோல ஆட்டம் இழந்த பின் ஓய்வறையில் பேட்டையும், ஹெல்மெட்டையும் மற்ற கிரிக்கெட் உபகரணங்களையும் தூக்கி எறிந்து மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொள்வார்கள்.
ஆனால், அதுபோன்ற விஷயங்களை இந்திய வீரர்களிடம் நாம் பார்க்க முடியாது. மிக, மிக அரிதான சூழ்நிலைகளிலேயே இந்திய வீரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலியா வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோருடன் நிதிஷ் குமார் ரெட்டி விளையாடி வரும் நிலையில், அவர்களைப் போல இவ்வாறு செய்திருக்கிறாரா எனவும் சில ரசிகர்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அனிகேத் வர்மா 13 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். அவர் ஐந்து சிக்ஸர்களை விளாசி அதிரவைத்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்று சிக்ஸர்களை அடித்து நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார்.
191 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதை அதிரடியாக அணுகி 16.1 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
செய்தி சுருக்கம்:
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- சரியாக விளையாடாததால் கோபமடைந்த அவர், ஓய்வறைக்குச் செல்லும் வழியில் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்தார்.
- இந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- ஆஸ்திரேலிய வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது போல நிதிஷ் குமார் ரெட்டி நடந்து கொண்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
- நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.


Click it and Unblock the Notifications