IPL 2025: வெளிநாட்டு வீரர்களுக்கு 2 ஆண்டு தடை.. ஆப்பு வைத்த ஐபிஎல் அணிகள்.. இனி ஏமாற்றினால் காலி
மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் கடுமையான விதிகளை பிசிசிஐ அமல்படுத்தி உள்ளது. அதன்படி இனி எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் மினி ஏலத்தை பயன்படுத்தி அதிக சம்பளத்தை பெற முடியாதபடி ஒரு விதியை அமல்படுத்தி உள்ளது. அதே போல, ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்ட பின் ஐபிஎல் தொடருக்கு முன் ஆட முடியாது என தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தால் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படும் எனவும் பிசிசிஐ அறிவித்து உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் மினி ஏலத்தில் சில வெளிநாட்டு வீரர்கள் குறுக்கு வழியை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வீரர்கள் பலர் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெறாமல் பின்னர் ஐபிஎல் மினி ஏலத்தில் மட்டும் பங்கு பெற்று வந்தனர். அதன் மூலம், அதிக சம்பளத்தையும் அவர்கள் பெற்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிக வீரர்களை வாங்க வேண்டும் என்பதால் ஒரே வீரருக்கு அதிக தொகையை செலவு செய்ய மாட்டார்கள். மேலும், மெகா ஏலத்தில் முக்கிய இந்திய வீரர்களுக்கு கடும் போட்டி நிலவும். அவர்களுக்கு அதிக தொகையை கொடுக்க அணிகள் முன்வரும். அதனால், மெகா ஏலத்தில் பங்குபெறும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஏலத்தில் பெரிய சம்பளம் கிடைக்காத சூழ்நிலை இருக்கிறது.

அதே சமயம், மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 5 முதல் 10 வீரர்களை மட்டுமே வாங்க முயற்சிக்கும் என்பதால் அப்போது அதிக தொகை வைத்திருக்கும் அணிகள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு பெரிய சம்பளத்தை அளிக்க முன் வருவார்கள். உதாரணத்திற்கு 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 20 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கப்பட்டார்கள்.
எந்த ஒரு இந்திய வீரருக்கும் அந்த அளவுக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு கூட ஐபிஎல் தொடரில் 12 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனால், வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தை மட்டும் பயன்படுத்தி அதிக சம்பளம் பெற முடியாதபடி பிசிசிஐ ஒரு விதியை அமல்படுத்தி இருக்கிறது.
அதாவது இனி மெகா ஏலத்தில் தங்கள் பெயரை பதிவு செய்யாத எந்த வெளிநாட்டு வீரரும் அதன் பிறகு நடக்கும் மினி ஏலத்தில் பங்கு பெற முடியாது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இல்லையெனில் அவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் எந்த ஐபிஎல் மினி ஏலத்திலும் பங்குபெறும் வாய்ப்பு கிடைக்காது.
அடுத்ததாக ஐபிஎல் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட பின் சில வெளிநாட்டு வீரர்கள் கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றனர். எந்த விதமான காயமும் இல்லாதபோதும், அவர்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என அறிவிக்கின்றனர். அதனால், கடைசி நிமிடங்களில் ஐபிஎல் அணிகளின் அணித் தேர்வில் குழப்பம் ஏற்படுகிறது.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தனர். அதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்த இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா கடைசி நிமிடத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி விலகினார். ஏலத்தில் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காததால் ஹசரங்கா விலகியதாக சர்ச்சை எழுந்தது.
இப்படி வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்ட பின்னரும் விலகியதால் அந்த அணிகள் அனைத்துமே பாதிக்கப்பட்டன. இனி இது போல ஒரு வீரர் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பின் தொடரில் விளையாட முடியாது என மறுத்தால், அந்த வீரருக்கு அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு தடை விதிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இந்த விதி இந்திய வீரர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு விதிகளால் இனி வெளிநாட்டு வீரர்கள் தங்கள் மனம் போன போக்கில் ஐபிஎல் ஏலத்தை கையாள முடியாது. ஐபிஎல் வெறும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு குறுக்கு வழி மட்டுமே அல்ல என்பதை திட்டவட்டமாக சுட்டிக் காட்டி இருக்கிறது பிசிசிஐ.


Click it and Unblock the Notifications