சண்டிகர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. 3 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்திருந்த பஞ்சாப் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த போது கொஞ்சம் கூட பொறுப்புடன் விளையாடாமல் மோசமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த நிலையில், 3வது ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா பொளந்து கட்டினார்.

இதன்பின் வைபவ் வரோரா வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி அதிரடியை தொடங்கிவிட்டதாக பார்க்கப்பட்ட போது, ஹர்சித் ராணா 4வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களில் வெளியேற, தொடர்ந்து 4வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஜோஷ் இங்லிஸ் வருண் சக்கரவர்த்தி பந்தில் 2 ரன்களில் போல்டாகி வெளியேற, பஞ்சாப் அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தாலும் பவர் பிளேவின் கடைசி ஓவரில் பிரப்சிம்ரன் சிங் அடுத்தடுத்து 2 சிக்ஸ் விளாசினார். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தில் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த நேஹல் வதேரா 10 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த சுயான்ஷ் ஷெட்கே 4 ரன்களிலும், மார்கோ யான்சன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஷஷாங்க் சிங் காப்பாற்றுவார் என்று பார்க்கப்பட்ட போது அவரும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக பஞ்சாப் அணி 15.2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
கேகேஆர் அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் விக்கெட் சரிவை கொஞ்சம் கூட தடுக்க முயற்சிக்காமல், அட்டாக் செய்வதிலேயே குறியாக இருந்தது அந்த அணியின் பின்னடைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.