இந்த தமிழனை பார்த்தாலே ஜெய்ஸ்வால், கில்லுக்கு பயம்.. 2025 ஐபிஎல் முடிந்தால் சோலி முடிந்தது
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணியில் ஒரு துவக்க வீரரின் இடம் கேள்விக்குள்ளாகும். அந்த இடத்தை தமிழக வீரரான சாய் சுதர்ஷன் பிடிப்பார் என இப்போதே முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கூறத் துவங்கியுள்ளனர். ஏனெனில், சாய் சுதர்ஷன் 2025 ஐபிஎல் தொடரில் நம்ப முடியாத ஒரு ஆட்டத்தை ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வருகிறார். இதுவரை 5 அரை சதங்கள் அடித்திருக்கிறார். சில போட்டிகளில் அரை சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்திருக்கிறார்.
துவக்க வீரரான அவர் நீண்ட நேரம் நின்று, விக்கெட் இழக்காமல், நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் ரன் சேர்த்து வருவதால், குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. சாய் சுதர்ஷனின் ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஐபிஎல் சார்ந்த அழுத்தம் மட்டுமல்லாது, இந்திய அணி சார்ந்த அழுத்தமும் ஆகும்.

இந்திய ஒரு நாள் அணியில் இருந்து ரோகித் சர்மா விரைவில் விலகுவார், அவர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது நடந்தால், இந்திய ஒரு நாள் அணியில் சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரர்களாக தங்கள் இடத்தை நிரந்தரமாகப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.
அதேபோல, டி20 அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது மாற்று வீரராக இடம்பெற்று வரும் நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் துவக்க வீரராக இடம்பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதேபோல, சுப்மன் கில்லும் டி20 அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு சாய் சுதர்ஷன் மிகப்பெரும் போட்டியாளராக மாறியிருக்கிறார்.
இதுவரை சாய் சுதர்ஷன் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற அளவிலேயே கவனிக்கப்பட்டு வந்தார். ரஞ்சி டிராபி போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடியதால், இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றுதான் பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது 2025 ஐபிஎல் தொடரில் அவர் 10 இன்னிங்ஸ்களில் 504 ரன்கள் சேர்த்திருக்கிறார். இந்த ஆண்டு 500 ரன்களை எட்டிய முதல் வீரர் இவர்தான். அவரது பேட்டிங் சராசரி 50.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 154.12 ஆகவும் உள்ளது.
ஒரு துவக்க வீரருக்கு இது நல்ல ஸ்ட்ரைக் ரேட்தான். மேலும், அவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 50 ரன்கள் எடுத்து வரும் நிலையில், அவரை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டிய அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த அழுத்தத்தை சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போதே உணரத் துவங்கியுள்ளனர் என்பதை, அவர்களின் செயல்பாட்டில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
2025 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் முதல் சில போட்டிகளில் ரன் குவிக்கவில்லை. அப்போது சாய் சுதர்ஷன் தொடர்ந்து அரை சதங்களை அடித்து, அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தார். அதன் பிறகு சுதாரித்த சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
தற்போது 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்ஷன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், சுப்மன் கில் 465 ரன்களுடன் நான்காவது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 439 ரன்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய டி20 அணியில் துவக்க வீரருக்கான இடத்தை பிடிப்பதில் இந்த மூன்று வீரர்களுக்கு மத்தியில் பெரும் போட்டி நடந்து வருகிறது. 2026 டி20 உலகக் கோப்பையில், இவர்கள் மூவரைத் தவிர அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரும் போட்டியில் இருப்பார்கள். இந்த ஐந்து பேரில் இரண்டு வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications