சந்திகார்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி இன்று ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இதனை பயன்படுத்தி ஆர்சிபி அபார வெற்றியை பதிவு செய்தது. குவாலிபயர் ஆட்ட்த்தில் 102 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் பில் சால்ட், 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்த வெற்றி குறித்து பேசிய பில் சால்ட், "அற்புதமான உணர்வு. இன்று இரவு எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. பந்து சற்று அசைந்தது. அது மைதானத்தின் தன்மையால் எவ்வளவு என்பது தெரியவில்லை. நாங்கள் விளையாடிய மைதானங்களில் இது மிகவும் மோசமானது இல்லை, அப்படித்தான் சொல்லுவேன்."

"என் மனதில் வந்தது, அர்ஷ்தீப்பிடம் ஆட்டமிழக்கக் கூடாது என்பதுதான்! பந்துக்கு ஏற்ப மட்டும் செயல்படு. ஆட்டத்துக்கு முன்பு கோச் ஆண்டியிடம் சொன்னேன், இது ஒரு வகையில் ஆசீர்வாதமாக இருந்தது. சில நேரங்களில் அதிகமாக யோசித்து, அதிகமாக விளையாடிவிடுவோம். அதனால், விளையாடு-பயணம்-விளையாடு என்பது ஒரு ஆசீர்வாதமாக இருந்தது."
"இது எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது. பழமையான வாக்கியம், ஆனால் உண்மை. தொடரின் இறுதிக்கட்டத்தில் நீங்கள் உங்கள் உச்சத்தை எட்ட விரும்புவீர்கள். பேட், பந்து அல்லது நடுவில் ஸ்ட்ரைக் ரேட் மூலம் நீங்கள் ஒரு பங்கு வகிக்க முடியும்." என்று பில் சால்ட் கூறினார்.
இதே போன்று முதல் குவாலிபையரில் 17 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுயாஷ் சர்மா, ஆட்டநாயகன் விருதை பெற்றார். இது குறித்து பேசிய அவர், "நான் சிறப்பாக செயல்பட்டேன், அதனால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! என் பங்கு ஸ்டம்புகளைத் தாக்குவது - அது கூக்ளியாக இருந்தாலும், லெக்ஸ்பின்னாக இருந்தாலும், ஃபிளிப்பராக இருந்தாலும். கூக்ளி என் முக்கிய பந்து, மைதானத்தின் தன்மையும் சற்று உதவியது. நாங்கள் வெற்றியை 3-ஆம் தேதி கொண்டாடுவோம்." என்று சுயாஷ் சர்மா கூறினார்.