மும்பை: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளின் முடிவில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அணிகள் எவை என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிடும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் மதியம் 3.30 மணிக்குத் துவங்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரவு 7:30 மணிக்குத் துவங்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டிகளின் முடிவில் எந்தெந்த அணிகள் வெற்றி பெறும் என்பதை வைத்து ஒன்று முதல் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இந்த மதியப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
இரவுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றால், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் என மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் மட்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றி பெற்றால், எந்த ஒரு அணியும் இன்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது.
இந்த ஆண்டு இதுவரை 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இதுவரை எந்த ஒரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இத்தனைக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 புள்ளிகளுடன் உள்ளது, குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் 16 புள்ளிகள் பெற்ற அணிகள் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த அளவுக்கு அனைத்து அணிகளுக்கு இடையேயும் போட்டி நிலவும்.
ஆனால், இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் படுமோசமாக விளையாடி, தாங்கள் விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்று இருக்கின்றன. அந்த அணிகளின் மோசமான செயல்பாட்டால் தற்போது முதல் ஆறு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த ஆண்டு நிச்சயம் சில அணிகள் 20 புள்ளிகள் வரை பெரும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னே எப்போதும் எந்த அணியும் புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளை பெற்றது இல்லை. இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இரண்டு போட்டிகளின் முடிவிலும் எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போகலாம் என்ற நிலையும் உள்ளதுதான் வியப்புக்குரியது.