சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 33 போட்டிகள் முடிவடைந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு, புள்ளிப் பட்டியலில் மூன்று அணிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் ஒரே மாதிரியான சூழ்நிலையில் உள்ளன.
இந்த மூன்று அணிகளுக்குமான பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் முறையே 8, 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா ஏழு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளைச் சந்தித்து, நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.

இந்த மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்னும் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் தலா ஏழு லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் ஆறு வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில், லீக் சுற்றின் முடிவில் 16 புள்ளிகளைப் பெற்ற அணிகள் பெரும்பாலும் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சில சமயங்களில் 14 புள்ளிகளைப் பெற்ற அணிகள், சிறந்த நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளின் நெட் ரன் ரேட் மைனஸில் உள்ளது. மற்ற ஏழு அணிகளின் நெட் ரன் ரேட் சிறப்பாக இருக்கின்றன. எனவே, அந்த அணிகளை முந்தி இந்த மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். இதனால், இந்த மூன்று அணிகளும் 16 புள்ளிகளைப் பெறுவதற்கு தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.
தற்போது நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கும் நிலையில், இன்னும் 12 புள்ளிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 12 புள்ளிகள் பெற வேண்டும் என்றால், மீதமுள்ள ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இது சாத்தியம்தான் என்றாலும், மூன்று அணிகளிலும் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் சமநிலையான ஆட்டம் இல்லை என்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த மூன்று அணிகளும் தங்களது பலவீனங்களிலிருந்து மீண்டு வந்து தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்குமா என்பது சந்தேகமே.