முல்லான்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ள 2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மழை பெய்தால், அது ஒரு அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறாமல், இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இடையே சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அதனால் போட்டி அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஐபிஎல் பிளேஆஃப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளுக்கு - அதாவது, முதல் தகுதிச்சுற்றுப் போட்டி (Qualifier 1), தகுதி நீக்கப் போட்டி (Eliminator), மற்றும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி (Qualifier 2) ஆகிய மூன்றுக்கும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்படவில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் உள்ளது.

அதன்படி, முல்லான்பூரில் நடைபெற உள்ள முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அந்தச் சூழ்நிலையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்று விடும். புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அடுத்து தகுதி நீக்கப் போட்டியில் விளையாட நேரிடும்.
இதே நிலைதான் நாளை நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியிலும் நடக்கும். அதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டி மழையால் தடைபட்டால், குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னேறும்.
பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் தலா 19 புள்ளிகள் பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதால் அந்த அணிக்கு மழை சாதகமாக மாறும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருப்பதால், மழை பெய்தால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்படும். எனினும், வானிலை அறிக்கையின்படி முல்லான்பூரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.