இவர் சாதாரண ஆளே இல்லை.. பிளே ஆஃப் மேட்ச்சை தன் மாநிலத்துக்கு மாற்றிய ஹர்பஜன் சிங்.. எப்படி செய்தார்?
முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் நியூ சண்டிகரில் உள்ள முள்லான்பூரிலும், குஜராத்தில் உள்ள அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன. இதில் முல்லான்பூர் மைதானம் எப்படி பிளே ஆஃப் போட்டிகளை நடத்துவதற்குத் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2025 ஐபிஎல் தொடரின் முதல் தகுதிப் போட்டியும் (Qualifier 1), எலிமினேட்டர் போட்டியும் ஹைதராபாத் நகரில் நடைபெற இருந்தன. இரண்டாவது தகுதிப் போட்டியும் (Qualifier 2) இறுதிப் போட்டியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்தன. ஆனால், இடையே இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் ஐபிஎல் தொடர் சில நாட்கள் தடைபட்டது.

மீண்டும் மே 17 முதல் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டும் வெளியானது. பிளே ஆஃப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அப்போதே கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறாது எனக் கூறப்பட்டது.
ஏனெனில், இறுதிப் போட்டி நடைபெற இருந்த நேரத்தில் கொல்கத்தாவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் சுட்டிக்காட்டின. அதனால் அங்கிருந்து இறுதிப் போட்டியை அகமதாபாத்துக்கு மாற்றுவது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
இதற்கு இடையே ஹைதராபாத்தில் நடக்கவிருந்த இரண்டு பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் அதிரடியாக சண்டிகரில் உள்ள முல்லான்பூருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், லீக் போட்டிகள் எதுவும் முல்லான்பூரில் நடைபெறவில்லை. லீக் போட்டிகளை முல்லான்பூரில் நடத்தாதபோது, எப்படி திடீரென பிசிசிஐ பிளே ஆஃப் போட்டிகளை மட்டும் அங்கு நடத்த முடிவு செய்தது என அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
இதன் பின்னணியில்தான் ஹர்பஜன் சிங் இருப்பதாகத் தற்போது தெரியவந்துள்ளது. ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பின் ஆலோசகராக இருந்து வருகிறார். அது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடரின் போட்டிகளை எங்கு நடத்துவது என்பதற்காக ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதில் இடம்பெற்று இருந்த ஹர்பஜன் சிங், முல்லான்பூர் மைதானத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன், பிட்ச் எப்படி அமையும் என்ற ஆய்வையும் நடத்தி இருக்கிறார். மேலும், வீரர்கள் எப்படிப் பயணம் செய்வார்கள், அதற்குரிய வசதிகள் இருக்கின்றனவா எனப் பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அனைத்து ஆய்வுகளின் முடிவிலும், சண்டிகரில் உள்ள முல்லான்பூரில் போட்டிகளை நடத்தலாம் எனக் கூறி இருக்கிறார். அவர் தனது மைதானம் இருக்கும் கிரிக்கெட் அமைப்பின் ஆலோசகராக என்ற ஒரே காரணத்திற்காக இதைச் சொல்லவில்லை. அவர் ஆய்வை மேற்கொண்டு புள்ளிவிவரங்களை அளித்தார். அதன் அடிப்படையில் தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அடுத்து ஹர்பஜன் சிங்கின் முக்கியத்துவத்தை அறிந்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். பல ஆண்டுகளாகவே சண்டிகர் மற்றும் பஞ்சாபில் உள்ள மைதானங்களில் சர்வதேசப் போட்டிகள் சரியான அளவில் நடத்தப்படவில்லை. அது குறித்து ஹர்பஜன் சிங் அவ்வப்போது விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது மாநிலத்திற்கு ஐபிஎல் தொடரின் முக்கியப் போட்டிகளை எடுத்துச் சென்று இருக்கிறார்.
மறுபுறம், முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த வேண்டும், அங்கிருந்து மாற்றக்கூடாது என தன்னாலான முயற்சிகளை எடுத்தார். ஆனால், பிசிசிஐ அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications