For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே சோலி முடிந்தது.. நான்கே மேட்ச்சில் முதல் இடத்தை பிடித்த டீம்.. ஐபிஎல் புள்ளிப் பட்டியல்!

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைய உள்ளன. தற்போது புள்ளிப் பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றி பார்க்கலாம். பிளே ஆஃப் செல்வதற்கு ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எத்தனை வெற்றிகள் வேண்டும் என்பது பற்றியும் பார்க்கலாம்.

தற்போது 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடி நான்கு வெற்றிகளைப் பெற்று இருக்கிறது. 8 புள்ளிகள் மற்றும் 1.278 என்ற நெட் ரன் ரேட்டுடன் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை தோல்வியே சந்திக்கவில்லை என்பதோடு நெட் ரன் ரேட்டும் அதிகமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் டெல்லி அணிக்கு இன்னும் பத்து லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அதில் நான்கு வெற்றிகளைப் பெற்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்ற நிலை உள்ளது.

IPL 2025 Points Table 27th match Team Standings and Playoff Qualification Scenarios

இரண்டாவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. அந்த அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மொத்தம் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் ரன் ரேட் 1.081 என்பதாக உள்ளது. அந்த அணிக்கு இன்னும் எட்டு லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அதில் நான்கு வெற்றிகளைப் பெற்றால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த நான்கு போட்டிகளிலும் வரிசையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே குஜராத் டைட்டன்ஸ் அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

மூன்றாவது இடத்தில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இடையே இரண்டு தோல்விகளை சந்தித்தாலும் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் மிகவும் சிறப்பாக உள்ளது.

ரிஷப் பண்ட் சரியாக விளையாடவில்லை என்றாலும் அந்த அணியில் இடம் பெற்று இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர். குறிப்பாக நிக்கோலஸ் பூரன் அந்த அணியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். அவரது அதிரடி ஆட்டம் எதிரணிகளை திணற வைத்து வருகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நெட் ரன் ரேட் தான் மிகவும் மோசமாக உள்ளது. இப்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.162 என்பதாக உள்ளது. இனி அந்த அணி தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் போது நெட் ரன் ரேட் தேவை என்றால் சிக்கல் ஏற்படக்கூடும்.

நான்காவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. அந்த அணி ஆறு போட்டிகளில் மூன்று வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. 6 புள்ளிகளுடன் உள்ளது. 0.803 என்ற நெட் ரன் ரேட்டை பெற்று இருக்கிறது. அந்த அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருப்பது சொந்த மைதானத்தில் ஆடும் போட்டிகள் தான்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் இதற்கு முன்பு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதை பயன்படுத்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று வந்தது. ஆனால் இந்த முறை பிட்ச் சற்று மாற்றத்துடன் உள்ளது. அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் திட்டத்துக்கு மாறானதாக இருப்பதால் அந்த அணியால் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்தால் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பைப் பற்றி சிந்திக்க முடியும். இல்லை எனில் அந்த அணியின் நிலை ஊசலாட்டமாக தான் இருக்கும்.

ஐந்தாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. அந்த அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்று இருக்கிறது. இரண்டு தோல்விகளை சந்தித்து உள்ளது. மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த அணி இதற்கு முந்தைய ஆண்டுகளில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு துவக்கம் நன்றாக இருக்கிறது.

ஆனால், இனிவரும் போட்டிகளிலும் இதை தொடருமா அல்லது கடந்த காலத்தை போல சரிவை சந்திக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இன்னும் ஒன்பது லீக் போட்டிகள் மீதம் உள்ளன. அதில் ஐந்து வெற்றிகளைப் பெற்றால் அந்த அணி உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நம்பலாம்.

ஆறாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது. அந்த அணியும் 5 போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்று ஆறு புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 0.065 என்பதாக உள்ளது. அதிரடி ஆட்டம் ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆனால் வெற்றி தோல்விகள் மாறி மாறி தான் அந்த அணிக்கு வந்து இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஏழாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. அந்த அணி 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 0.733 என்பதாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் மீதும் உள்ள நிலையில் அதில் ஆறு வெற்றிகளைப் பெற வேண்டும். அந்த அணியின் பந்துவீச்சு ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு விதமாக இருப்பது பின்னடைவாக உள்ளது.

எட்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது. இந்தத் தொடரிலேயே அதிக அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்துள்ள அணி என்ற பிம்பம் இருந்தாலும் முதல் போட்டிக்குப் பிறகு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. தற்போது மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. அந்த அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் உள்ளது. இனி மீதமுள்ள எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

ஒன்பதாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. அந்த அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 0.010 என்பதாக உள்ளது. அந்த அணிக்கு இன்னும் ஒன்பது போட்டிகள் மீதும் உள்ளன. அதில் ஏழு வெற்றிகளைப் பெற்றால் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களை வைத்துக் கொண்டே தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இனி வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி என்ற பெருமையை உடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை பிளே ஆஃப் செல்வது சாத்தியமே இல்லை என அனைவரும் அடித்து கூறி வருகின்றனர். அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள எட்டு போட்டிகளில் ஏழு வெற்றிகளைப் பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக செல்லும். ஆனால் அது சாத்தியமா? என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்தும் படுமோசமாக உள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிக, மிக கடினமான விஷயம்தான்.

Story first published: Sunday, April 13, 2025, 9:44 [IST]
Other articles published on Apr 13, 2025
English summary
IPL 2025 Points Table 27th match: Team Standings and Playoff Qualification Scenarios
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+