வைபவ் சூர்யவன்சியை கட்டி அணைத்ததாக போலி புகைப்படம்.. பொங்கி எழுந்த ப்ரீத்தி ஜிந்தா.. வெளியிட்ட பதிவு
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சியை, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா கட்டி அணைத்துப் பாராட்டியதாகச் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. ஆனால், அது 'மார்ப்' செய்யப்பட்ட புகைப்படம் எனப் ப்ரீத்தி ஜிந்தா தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரின் இளம் வீரராக அறிமுகமானார் வைபவ் சூர்யவன்சி. ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அறிமுகமான வீரராக அவர் திகழ்ந்தார். 14 வயதிலேயே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், அதிரடியாக சதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமாகச் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி மே 18 அன்று நடைபெற்றது. அந்தப் போட்டி முடிந்தவுடன், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அனைத்து வீரர்களையும் சந்தித்து கைகுலுக்கினார். அப்போது வைபவ் சூர்யவன்சியையும் அவர் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அது அதிகாரப்பூர்வமான பஞ்சாப் கிங்ஸ் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியாகி இருந்தது.
ஆனால், அந்த வீடியோவில் எந்த இடத்திலும் ப்ரீத்தி ஜிந்தா வைபவ் சூர்யவன்சியை கட்டி அணைக்கவில்லை. ஆனால், அது போன்ற சில புகைப்படங்கள் பல்வேறு நபர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்பட்டது. அது உண்மையான புகைப்படம் என நினைத்துச் சில ஊடகங்களும் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டன. அதைப் பார்த்து கொந்தளித்த ப்ரீத்தி ஜிந்தா, அது போலியான புகைப்படம் என தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "இது 'மார்ப்' செய்யப்பட்ட புகைப்படம். மேலும், இது பொய்யான செய்தி. தற்போது செய்தி சேனல்களிலும் 'மார்ப்' செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாவது ஆச்சரியத்தை அளிக்கிறது," என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications