IPL 2025: இது டீமே இல்லை.. ஒரு குடும்பம்.. சிஎஸ்கே செய்த காரியம்.. நெகிழ்ந்து போன ரச்சின் ரவீந்திரா
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் இடம் பெற்று இருந்தார் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையத்தில் பயிற்சி செய்து வருகிறார். இது ஐபிஎல் தொடருக்கான பயிற்சி இல்லை என்பது தான் இதில் முக்கிய விஷயம். நியூசிலாந்து அணி அடுத்து ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிராக வரிசையாக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த மையம் சென்னையில் உள்ளது. இந்திய மண்ணில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்தியாவிலேயே அதற்கான பயிற்சி செய்ய வேண்டும் என ரச்சின் ரவீந்திரா முடிவு எடுத்து இருந்தார். அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு அளவில் உதவி செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரச்சின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவாரா? என தெரியாத நிலையிலும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.

2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது அப்போது ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் அவர் இனி சிஎஸ்கே அணியில் இடம் பெறுவாரா? என்பதும் சந்தேகம்தான். ஏலத்தில் அவரை விடுவித்துவிட்டு பின்னர் மற்ற அணிகளுடன் போட்டி போட்டு தான் வாங்க முடியும்.
ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணியில் இடம் பெறுவாரா என்பது கூட தெரியாத நிலையில், அவருக்கு தங்களின் பயிற்சி மையத்தில் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம். அவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இது ரச்சின் ரவீந்திரா மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நெகழ்ச்சி சம்பவமாக அமைந்தது. "சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு அணி அல்ல, இது ஒரு குடும்பம்" என பதிவிட்டு சிஎஸ்கே நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.
2024 ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் அவர் 10 இன்னிங்ஸ்களில் 578 ரன்கள் குவித்து இருந்தார். அந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்று இருந்தார். அதனால், அவரை ஐபிஎல் ஏலத்தில் 1.8 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கி இருந்தது.
2024 ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திரா முதல் இரண்டு போட்டிகளில் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்திருந்தார். அதன் பின் அவரது பேட்டிங் செயல்பாடு சரிவை சந்தித்தது. 10 போட்டிகளில் 222 ரன்கள் மட்டும் எடுத்தார். எனினும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 160.87 ஆக இருந்தது. அவர் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவாரா? என பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications