பெங்களூர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
முன்னதாக, இந்தப் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த போதும், 45 நிமிட நேரம் மழை பெய்ததால் வீரர்கள் அனைவரும் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். பின்னர் மழை நின்றதால் மீண்டும் சிறிது நேரம் பயிற்சி செய்தனர். ஆனால் மீண்டும் மழை பெய்ததால், அத்துடன் பயிற்சியை முடித்துக்கொண்டு அனைத்து வீரர்களும் வெளியேறினர்.

மே 3 அன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதே சமயம், வெப்பம் 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை 50% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்தப் போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. எனினும், மழையால் போட்டி முழுமையாகத் தடைபட வாய்ப்பு இல்லை. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த வடிகால் வசதிகள் உள்ளன. எனவே மழை பெய்தாலும், ஆடுகளத்தில் நீர் தேங்குவதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே ஓவர்கள் குறைக்கப்பட்டு இந்தப் போட்டி நடத்தப்படலாம். அதேபோல, போட்டி தாமதமாகத் துவங்கவும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது மழை பெய்தது. அப்போது 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக அது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.