IPL 2025- 13 வயது வீரர் சூர்யவன்ஷிக்கு 1.1 கோடி தந்தது ஏன்? ராஜஸ்தான் பயிற்சியாளர் டிராவிட் விளக்கம்
மும்பை :ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி என்பவருக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறது. ராஜஸ்தான் அணி ஏலத்திற்கு முன்பே ஆறு வீரர்களை தக்க வைத்த நிலையில் தற்போது தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சூரியவன்சியிடம் பல நல்ல திறமைகள் இருக்கின்றது. எட்டாவது படிக்கும் மாணவர் ஒருவர் நாங்கள் நடத்திய திறன் பரிசோதனை முகாமுக்கு வந்திருந்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

அவருடைய பேட்டிங்கை பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சிறுவனிடம் நல்ல திறமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே சூரிய வன்சிக்கு ஒரு நல்ல களசூழலை ஏற்படுத்தி அதில் அவரை வளர்க்க வேண்டும் என எங்கள் அணி நிர்வாகம் நினைத்தது. இதனால் தான் சூரியவன்ஷிக்கு நாங்கள் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்தோம்.
எங்கள் அணியில் ஏலத்திற்கு முன்பே பல இந்திய வீரர்களை நாங்கள் தக்க வைத்திருந்தோம். எனவே இந்த மெகா ஏலத்தில் நாங்கள் பெரிய அளவில் பந்துவீச்சாளர்களை வாங்குவது என்று இலக்கை வைத்திருந்தோம். ஏலத்தில் எங்களுக்கு தேவையான பலமான வேகப்பந்துவீச்சு படையை நாங்கள் தயார் செய்து விட்டோம் என்று நினைக்கிறேன்.
எங்கள் அணியில் தற்போது நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆர்ச்சர் போன்ற வீரர் அணியில் இருப்பது நிச்சயம் நன்மையை தரும். இதைப் போன்று ஃபரூக்கி,மசாக்கா போன்ற வீரர்கள் நன்றாக பந்தை ஸ்விங் செய்வார்கள். இந்த ஏலம் எங்களுக்கு திருப்தியை கொடுத்தது. பயிற்சியாளராக ராஜஸ்தான் அணிக்கு நான் திரும்பியதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்களை பெரிய கிரிக்கெட் வீரர்களாக மெருகேற்றி இருக்கிறது. ஜடேஜா, சஞ்சு சாம்சன்,ரியான் பராக் போன்ற வீரர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளனர். தற்போது 13 வயது வீரரான சூரியவன்ஷியும் ராகுல் டிராவிட் கீழ் மெறுகேறுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications