மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. இந்த சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பிசிசிஐக்கு ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "ஐபிஎல் தொடர் மூலம் நாம் பல்வேறு வீரர்களிடம் நல்ல ஒரு நட்பு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். என்னுடைய நெருங்கிய நண்பர் என்றால் அது ஜாஸ் பட்லர் தான். நாங்கள் இருவரும் இணைந்து ஏழு ஆண்டுகள் விளையாடி இருக்கின்றோம்."

"இந்த ஏழு ஆண்டுகளில் எங்களுடைய பார்ட்னர்ஷிப் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு விளையாடி இருக்கிறோம். அவர் என்னுடைய மூத்த சகோதரர் போன்றவர். எனக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால் நான் அவரிடம் தான் போய் கேட்பேன்."
"நான் கேப்டனாக இருக்கும்போது அவர் என் அணியின் துணை கேப்டனாக இருந்து எனக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இதன் மூலம் நான் நல்ல கேப்டன் என்ற பெயரை வாங்கி இருக்கிறேன். ஆனால் ராஜஸ்தான் அணியில் இருந்து அவரை விடுவித்து இருப்பதை கடுமையான முடிவாக நான் நினைக்கின்றேன்."
"அண்மையில் நடந்த இங்கிலாந்து தொடரில் கூட, நீங்கள் அணியை விட்டு சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினேன். ஐ பி எல் தொடரில் ஏதேனும் ஒரு விதியை மாற்ற வேண்டும் என கூறினால், நான் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரர்களை விடுவிக்கும் முறையை மாற்றங்கள் என்று தான் சொல்வேன்."
"இதில் சில நல்ல விஷயங்களும் இருந்தாலும், பல ஆண்டுகளாக நாங்கள் ஏற்படுத்தி இருக்கும் பந்தம் முடிகிறது. என்னுடைய குடும்பத்தில் ஒருவராக ஜாஸ் பட்லர் இருந்தார். வேறு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ராகுல் டிராவிட் தான் என்னை முதன் முதலில் அடையாளம் கண்டு ராஜஸ்தான் அணிக்கு அழைத்து வந்தார்."
"அன்றிலிருந்து இன்று வரை நான் சாதாரண வீரராக இருந்து தற்போது கேப்டன் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். ராகுல் டிராவிட் அப்போது கேப்டன் ஆக இருந்தார். தற்போது பயிற்சியாளராக எனக்கு இருக்கின்றார். மீண்டும் அவருடன் இணைந்து செயல்படுவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன்."
"ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அதையும் பொறுத்துக் கொண்டுதான் தற்போது பயிற்சியாளராக அவர் இணைந்து இருக்கிறார். நாக்பூரில் உள்ள ராஜஸ்தான் பயிற்சி மையத்தில் கடந்த ஒரு மாதமாக நாங்கள் நல்ல பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் அணியில் இருக்கும் 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றார். அவர் பயிற்சியின் போது பெரிய சிக்சர்களை அடித்தார். அவர் போட்டிகளுக்கு தயாராக இருப்பது போல் தான் தெரிகிறது" என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.