மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரியான் பராக் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கடந்த சீசனில் 16 இன்னிங்ஸில் விளையாடி 573 ரன்களை விளாசிய ரியான் பராக், இந்த சீசனில் 11 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 282 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் ரேஸில் இருந்து ராஜஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 8 தோல்வி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடந்த 3 சீசன்களில் 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி, ஒரு சீசனில் கடைசி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஆனால் இம்முறை ராஜஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2வது அணியாக வெளியேறி இருக்கிறது. இதற்கு ராஜஸ்தான் அணியின் மோசமான நிர்வாகமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரிடென்ஷனிலேயே ரியான் பராக், துருவ் ஜுரெல் மற்றும் ஹெட்மயர் ஆகியோரை பெரிய தொகைக்கு தக்க வைத்து கொண்டது.
அதிலும் ரியான் பராக் ரூ.14 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டு, கேப்டன் பொறுப்பையும் அளித்தனர். அவர் தலைமையில் ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. கேப்டன்சியில் இல்லையென்றாலும் பேட்டிங்கிலாவது நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரியான் பராக் 11 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த சீசனில் 11 இன்னிங்ஸில் ஆடியிருக்கும் ரியான் பராக், வெறும் 282 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். கடந்த சீசனில் 16 இன்னிங்ஸில் விளையாடி 573 ரன்களை விளாசியதால், ரியான் பராக் இனி மிகப்பெரிய வீரராக வருவார் என்று பலரும் பாராட்டினர். ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சுமார் 7 சீசன்களாக விளையாடி வரும் ரியான் பராக், இதுவரை எந்த பவுலரை அட்டாக் செய்ய வேண்டும், எந்த பவுலரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. முக்கியமான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அடுத்த சீசனில் ரியான் பராக்கை ரிலீஸ் செய்துவிட்டு, மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கலாம்.
அதேபோல் துருவ் ஜுரெல் மற்றும் ஹெட்மயர் ஆகியோரை ராஜஸ்தான் அணி ரிலீஸ் செய்யும் முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மாவை தவிர்த்து ராஜஸ்தான் அணியில் எந்த பவுலரும் இல்லை. இதனால் சிறந்த பவுலர்களை வாங்க ராஜஸ்தான் அணி ஏலத்தில் பெரிய தொகையுடன் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று பார்க்கப்படுகிறது.