சென்னை: ஐபிஎல் தொடரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், மெகா ஏலத்தில் என்ன விதிகள் வர வேண்டும், பழைய விதிகளில் உள்ள பிரச்சனை, வீரர்களுக்கான ஒப்பந்தம், இம்பேக்ட் பிளேயர் விதி என்று ஏராளமான விஷயங்கள் குறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார்.
அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் யூடியூப் சேனலில் அஸ்வின் பேசுகையில், இம்பேக்ட் பிளேயர் விதி என்பது தேவையானது என்றே நினைக்கிறேன். இம்பேக்ட் பிளேயர் விதியால் கூடுதலாக இந்திய வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். அதேபோல் பனிப்பொழிவு இருந்தால், டாஸிலேயே வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதியால் கடந்த சீசனில் ஏராளமான போட்டிகள் டிஃபெண்ட் செய்யப்பட்டன. ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து என்று ஏராளமான விளையாட்டுகளில் சப்ஸ்ட்டிடியூட் இருப்பது போல், கிரிக்கெட்டிலும் இருப்பதில் தவறில்லை. அதேபோல் ஆர்டிஎம் என்ற வாய்ப்பை எந்த அணிக்கும் ஐபிஎல் நிர்வாகம் அளிக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் ஒரு வீரரை தேவையில்லை என்று ஏலத்திற்கு அந்த அணி நிர்வாகம் அனுப்பிவிட்டது. அதன்பின் அவரை வாங்க இரு அணிகள் போட்டியிட்டு, இறுதியாக ஒரு அணி ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் போது, ஆர்டிஎம் கார்டை காட்டி அதே தொகைக்கு வாங்குவது சரியல்ல. ஏனென்றால் ஏலம் என்பது அங்கு முடியவில்லை.
இரு அணிகளும் அவருக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன் வந்துள்ளனர். அப்போது மீண்டும் ஏலம் நடத்தப்பட்டு, அந்த வீரருக்கான தொகையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அஸ்வினின் இந்த கருத்தை இந்திய முன்னாள் வீரர் கிரிஷ் ஸ்ரீகாந்தும் ஆமோதித்தார். தொடர்ந்து அஸ்வினிடம் அவரின் ஆல் டைம் ஐபிஎல் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அஸ்வின், 5 முறை கோப்பை வென்ற இரு கேப்டன்களான தோனி, ரோஹித் சர்மா ஆகிய இருவரை சுற்றியே அணியை கட்டமைப்பேன். 3வது வீரராக பும்ரா நிச்சயம் இடம்பெறுவார். இதில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, நம்பர் 3ல் சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா, நம்பர் 4ல் சூர்யகுமார் யாதவ், நம்பர் 5ல் டி வில்லியர்ஸ், நம்பர் 6ல் தோனி என்று பேட்டிங்கை கட்டமைப்பேன்.
7வது வீரராக ரஷித் கான், நம்பர் 8ல் சுனில் நரைன், நம்பர் 9ல் புவனேஷ்வர் குமார், நம்பர் 10ல் லசித் மலிங்கா மற்றும் நம்பர் 11ல் பும்ரா ஆகியோர் எனது அணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தார். இந்த அணியில் 4 மும்பை வீரர்கள், 2 சிஎஸ்கே வீரர்கள், 2 ஆர்சிபி வீரர்கள், 2 ஐதராபாத் அணி வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.