Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை பார்க்காமல் தப்பிக்க நினைத்த ரவீந்திர ஜடேஜா.. 2005இல் நடந்த சம்பவம்.. என்ன நடந்தது?

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடி முடித்திருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பிடித்திருந்த ரவீந்திர ஜடேஜா, தோனி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின்னின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்தார். அப்போது தோனியை முதன் முதலில் தான் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை விவரித்தார்.

"நான் முதன் முதலில் தோனியை சென்னையில் நடந்த 2005 சேலஞ்சர்ஸ் டிராபி தொடரில் தான் சந்தித்தேன். நான் மும்பையில் இருந்து வந்து கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் ஒரே விமானத்தில் தான் இருந்தோம். நான் எக்கனாமி பிரிவில் அமர்ந்திருந்தேன். தோனி பிசினஸ் பிரிவில் அமர்ந்திருந்தார்."

IPL 2025 Ravindra Jadeja Recalls First Meeting with MS Dhoni

"எல்லோரும் அப்போது 'தோனி நமக்கு முன் தான் அமர்ந்து இருக்கிறார்' என்று சொன்னார்கள். எனக்கு அவரைப் பார்ப்பதற்கு தயக்கமாக இருந்தது. இப்போதும் நான் அவரைப் பார்ப்பதற்கு தயங்குவேன். ஏனெனில், அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால் என்ன செய்வது என்று யோசிப்பேன். அவர் எப்போதும் எதுவும் சொல்ல மாட்டார், ஆனால் அவர் நல்ல மனநிலையில் இல்லை என்றால் அது முகத்தில் தெரியும். அப்போது நான் சிறுவனாக இருந்தேன், எனவே அப்போது தோனி போன்ற ஒருவரை எப்படிப் பார்ப்பது என்ற தயக்கம் இருந்தது."

"நான் முதல் முறை அவரை விமானத்தில் பார்த்தபோது அவருக்கு நீளமான முடி இருந்தது. எங்கள் மேலாளர் தோனியுடன் நாம் ஒன்றாகத்தான் ஹோட்டலுக்குச் செல்லப் போகிறோம் என்றார். நான் எப்படி அவருடன் ஒன்றாகச் செல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக தோனியின் மொபைல் போன் கீழே விழுந்துவிட்டது. அதனால் அவர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வந்தது."

"நான் இந்த விஷயத்தை வைத்து 'இங்கிருந்து நாம் வெளியே சென்று விடலாம்' என்று நினைத்தேன். அப்போது 'தோனி இந்திய அணிக்காக ஆடுபவர், அவரிடம் நாம் என்ன பேசுவது' என்று நினைப்பேன்," இவ்வாறு ரவீந்திர ஜடேஜா தோனியுடன் தனது முதல் சந்திப்பு பற்றி பேசி இருக்கிறார்.

அதன் பிறகு தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா நீண்ட காலம் விளையாடினார். இந்திய அணியிலும் தோனி தலைமையில் விளையாடினார். 2018, 2021 மற்றும் 2023 ஆகிய மூன்று ஐபிஎல் கோப்பைகளை தோனியின் கேப்டன்சியில் ரவீந்திர ஜடேஜா வென்றிருக்கிறார்.

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து சிஎஸ்கே அணிக்குக் கோப்பை வென்று கொடுத்தார். அப்போது தோனி அவரைக் கட்டிப்பிடித்துத் தூக்கினார். அந்த நினைவுகள் இன்றும் ஐபிஎல் ரசிகர்களால் மறக்க முடியாததாக இருக்கிறது.

Story first published: Thursday, May 29, 2025, 11:58 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+