பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் நான்கு ரன்களிலும், விராட் கோலி ஒரு ரன்களிலும், லிவிங்ஸ்டோன் நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதே போன்று ஜித்தேஷ் சர்மா இரண்டு ரன்களிலும் குருணல் பாண்டியா ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரஜத் பட்டிதார் மட்டும் 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். எனினும் அவரும் ஆட்டமிழந்தார். இதனால் ஆர் சி பி அணி 42 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி 49 ரன்களில் ஆட்டம் இழந்ததை இதுவரை எடுக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இதனால் ரசிகர்கள் ஆர் சி பி அணியை எப்போதுமே 49 கேங் என்றுதான் கிண்டல் செய்வார்கள். இதனால் ஆர்சிபி அணி மீண்டும் ஒரு மோசமான ஸ்கோரை நோக்கி சென்றது. ஆர்சிபி அணியை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர்.
சின்னசாமி மைதானத்தில் ஆர் சி பி அணிக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாக மீம்ஸ் பறந்தது. இந்த சூழலில் சிங்கப்பூர் சித்தப்பா என்று அழைக்கப்படும் ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் களத்திற்கு வந்து அதிரடியை காட்டினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் தனியாலாக நின்று டிம் டேவிட் ஐந்து பவுண்டரி, மூணு சிக்ஸர் என 26 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இன்று தன்னுடைய முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதனால் ஆர் சி பி அணி 49 ரன்கள் தாண்டியது மட்டுமல்லாமல் 14 ஓவர் முடிவில் 95 ரன்கள் என கௌரவமான இலக்கை எட்டியது. பஞ்சாப் அணி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 21 ரன்கள் சென்றது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது.