சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனியை சேப்பாக்கம் மைதானத்திலேயே ஆர்சிபி அணி கேவலப்படுத்தியதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஒருமுறை கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தோனிக்கு ஷார்ட் லெக் ஃபீல்டரை கம்பீர் நிறுத்தியதை போல், இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஷார்ட் லெக் ஃபீல்டரை நிறுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. அதிரடியாக ரன்களை விளாசிய கேப்டன் ரஜத் பட்டிதார் 51 ரன்களும், கடைசி நேரத்தில் வந்த டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்களும் விளாசினர்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி வெளியேற, கண்மூடி திறப்பதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் வெளியேறினர். பின்னர் வந்த சிவம் துபே 19 ரன்களில் ஆட்டமிழக்க, அனைவரும் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் திடீரென அஸ்வின் களம் புகுந்தார். அவரும் 8 பந்துகளில் 11 ரன்களில் வெளியேற, பின்னர் தோனி வந்தார். வழக்கமாக தோனி வரும் போது எழும் கோஷம் இம்முறை வரவில்லை. அப்போது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியின் ரசிகர்களை மேலும் காயப்படுத்தும் வகையில் தோனிக்கு ஷார்ட் லெக் ஃபீல்டிங்கை நிறுத்தியது. லிவிங்ஸ்டனில் பவுலிங்கில் தோனியை வீழ்த்த ஷார்ட் லெக் ஃபீல்டிங்கை ரஜத் பட்டிதார் நிறுத்தினார்.
இதனால் டி20 கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்கான ஃபீல்டிங்கை நிறுத்தி தோனியை கேவலப்படுத்தியதாக ரசிகர்கள் சோகமடைந்தனர். இதற்கு முன்பாக கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியின் போது தோனிக்கு ஷார்ட் லெக் ஃபீல்டர் நிறுத்தப்பட்டது. அப்போது முதலே தோனி டி20 போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருவதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் கடைசி 2 ஓவர்களில் தோனி தனது அதிரடியை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட தோனி, தான் எப்போதும் சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபித்ததோடு, சிஎஸ்கே அணியின் ரன் ரேட் சரியாமல் பார்த்து கொண்டார். கடைசி நேரத்தில் வந்த தோனி, 16 பந்துகளில் 30 ரன்களை விளாசி அசத்தினார்.