மும்பை: 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் பெயரும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரண்டு ஐபிஎல் அணிகள் அவரை வாங்க முழுமூச்சுடன் களத்தில் இறங்கி உள்ளதாகவும், அவர் அவருக்காக அதிகபட்சமாக 25 கோடி வரை ஏலம் கேட்க முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அப்படி ரிஷப் பண்ட்டை ஏலத்தில் வாங்கினால் அவரை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்கவும் அந்த இரண்டு அணிகளும் முடிவு செய்துள்ளன. அந்த இரண்டு அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

கடந்த சில ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாப் டூ பிளசிஸ் செயல்பட்டு வந்தார். அவருக்கு வயதாகும் நிலையில் அவரை நீக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. அந்த அணிக்கு தற்போது இளமையான கேப்டன் ஒருவர் தேவை. முன்பு கே எல் ராகுலை பெங்களூரு அணி வாங்க முயற்சிக்கும் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்றால் அவரை வாங்கவே அந்த அணி முயற்சிக்கும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதேபோல லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட உள்ளதாகவும், அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லக்னோ அணியும் துடிப்பான கேப்டன் ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. எனவே, அந்த அணியும் ரிஷப் பண்ட்டை வாங்க மிகவும் ஆவலாக உள்ளது.
ரிஷப் பண்ட் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுகிறார். தோனிக்கு பின் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த, தனித்துவமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் அதிரடி ஆட்டம் ஆடுவார் என்பதோடு, அவரது அணுகுமுறையும் அதிரடியாகவே இருக்கும்.
அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அந்த அணியின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ரிஷப் பண்ட்டை டெல்லி அணி வெளியேற்றும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் ரிஷப் பண்ட் ஏலத்தில் இடம் பெறுவார். அப்போது அனைத்து அணிகளும் அவரை வாங்க போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அவரை கேப்டன் பதவிக்காக மட்டுமே வாங்க குறி வைத்து உள்ளன. அதன்படி அந்த இரண்டு அணிகளும் அதிகபட்சமாக 25 கோடி வரை அவருக்காக ஏலம் கேட்க முடிவு செய்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை அதிகபட்சமாக ஒரு வீரருக்காக கேட்கப்பட்ட ஏலத் தொகை 24.75 கோடி தான்.
2024 ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்-குக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அந்தத் தொகையை ஏலம் கேட்டு வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், அதற்கு இணையான ஒரு தொகை ரிஷப் பண்ட்டுக்காகவும் ஏலத்தில் கேட்கப்படும் எனவும், அதிலும் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் தான் அந்த அளவுக்கு ஏலம் கேட்க தயாராக உள்ளன எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.