மும்பை: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரிட் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பின் ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவர் மட்டுமே இருக்கின்றனர். அதிலும் அர்ஷ்தீப் சிங் இதுவரை டி20 கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.
இதுவரை ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங்கால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்காக கலீல் அஹ்மத், முகேஷ் குமார், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் இந்திய அணிக்கு அறிமுகமானாலும், அவர்களால் இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை.

இதனால் இரண்டாம் கட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கூட்டணியை அமைக்க முடியாமல் இந்திய அணி நிர்வாகம் திண்டாடி வருகிறது. பும்ரா ஏற்கனவே முக்கியமான தொடர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறார். இன்னொரு பக்கம் முகமது ஷமி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப தயாராகி வருகிறார். முகமது சிராஜிடம் கன்சிஸ்டன்சி பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரில் 140 முதல் 150 கிமீ வேகத்தில் வீசக் கூடிய ஏராளமான பவுலர்கள் ஐபிஎல் தொடர் மூலமாக கண்டறியப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ்பாண்டே, கேகேஆர் அணி ஹர்சித் ராணா, ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் வைஷாக் விஜயகுமார் உள்ளிட்டோரால் நல்ல வேகத்தில் வீச முடிகிறது.
ஆனால் இவர்கள் அனைவரும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் போதுமான அனுபவத்தை பெற முடியவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தை பெறாததால் உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் திண்டாடி வருகின்றனர். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெறும் 24 பந்துகளை மட்டுமே வீசுகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசும் அழுத்தம், நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் இருக்காது. அதனால் டி20 கிரிக்கெட்டை வைத்து யாரையும் எடைபோட முடியாது. என்னை பொறுத்தவரை பவுலர்கள் அனைவருமே சிவப்பு பந்தில் பவுலிங் செய்து பழக வேண்டும். முதல்தர போட்டிகளில் பவுலிங் செய்யும் போது பிட்ச்கள் மோசமாக இருக்க வாய்ப்புக்ள்ளது.
சில நேரம் காயத்தில் இருந்து நேரடியாக விளையாடி வந்திருப்போம். அதேபோல் ஒவ்வொரு பவுலரும் ரிவர்ஸ் ஸ்விங்கை செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் பிட்ச் வரலாறு அப்படி. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவருக்கும் அதுதான் மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக துலீப் டிராபியில் 20க்கும் அதிகமான வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், யாஷ் தயாள், துஷார் தேஷ்பாண்டே, ஆதித்யா தாக்கரே, ஆகாஷ் சென்குப்தா, நவ்தீப் சைனி, மோதி அவஸ்தி, சந்தீப் வாரியர், கவுரவ் யாதவ் என்று ஏராளமானோர் துலீப் டிராபியில் தேர்வு செய்யப்பட்டதற்கு இதுதான் காரணமாக அமைந்துள்ளது.
இந்த துலீப் டிராபியில் சிறப்பாக செயல்படும் வேகப்பந்துவீச்சாளர்கள் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளேயிங் லெவனில் இல்லையென்றாலும், இந்திய அணியுடன் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல் வலைப்பயிற்சியில் வீசக் கூடிய வாய்ப்பையும் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.