சென்னை: 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகளைத் தொடங்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஆனால் இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஒரு போட்டி கூட நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி நிர்வாகங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் கடந்த ஒரு வாரமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் நிலையில், மே 17 முதல் ஜூன் 3 வரையிலான தேதிகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

இது சவாலானது என்றாலும், ஆறு மைதானங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. முன்னதாக தென்னிந்திய நகரங்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து நீண்ட தூரத்தில் இருப்பதால் பாதுகாப்பானவை என்றும், அங்குதான் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும், அது மிகவும் பாதுகாப்பானது என்பதால் வெளிநாட்டு வீரர்கள் எந்தச் மறுசிந்தனையும் இன்றி பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது ஆனால், அதற்கு நேர்மாறான ஒரு விஷயம் நடந்துள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத் தவிர்த்து வேறு ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய ஆறு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கு என்ன காரணம் என விசாரித்த போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன என்ற ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (KKR) இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சிறிய வாய்ப்புடன் இருக்கிறது.
ஆனால், கொல்கத்தாவில் எந்த ஒரு போட்டியும் நடத்துவதாகத் திட்டமிடப்படவில்லை. மேலும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்பு கொல்கத்தாவில் தான் இறுதிப் போட்டி மற்றும் ஒரு பிளே ஆஃப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது.
ஏன் கொல்கத்தாவில் ஒரு போட்டி கூட நடத்தவில்லை என விசாரித்த போது, கொல்கத்தாவில் மே இறுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் அப்போது அங்கு நடத்தப்படும் போட்டிகள் தடைபடும். அதை தவிர்க்கவே கொல்கத்தாவிற்கு பதிலாக ஜெய்ப்பூரைத் தேர்வு செய்ததாக பிசிசிஐ கூறியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (RR) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால், அந்த அணியின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் சொந்த மைதானங்களில் ஒரு போட்டி கூட நடத்தப் போவதில்லை. இது போன்ற பாரபட்சமான முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதி உள்ளது. அங்கு சில நாட்கள் முன்பு ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்தன. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அவ்வப்போது சீண்டும் வகையில் ட்ரோன்களை பறக்கவிட்டு வருகிறது.
எனவே, இன்னும் 100 சதவீதம் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், தென்னிந்திய நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது உண்மையிலேயே பாதுகாப்பான வாய்ப்பாக இருக்கும். ஆனால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அணிகள் என்ற ஒரு காரணத்தை வைத்து சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
2025 ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 17 போட்டிகளுக்கான அட்டவணை:
மே 17, 2025 - சனி - இரவு 7:30 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு x கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இடம்: பெங்களூரு
மே 18, 2025 - ஞாயிறு - மாலை 3:30 - ராஜஸ்தான் ராயல்ஸ் x பஞ்சாப் கிங்ஸ் - இடம்: ஜெய்ப்பூர்
மே 18, 2025 - ஞாயிறு - இரவு 7:30 - டெல்லி கேபிடல்ஸ் x குஜராத் டைட்டன்ஸ் - இடம்: டெல்லி
மே 19, 2025 - திங்கள் - இரவு 7:30 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் x சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - இடம்: லக்னோ
மே 20, 2025 - செவ்வாய் - இரவு 7:30 - சென்னை சூப்பர் கிங்ஸ் x ராஜஸ்தான் ராயல்ஸ் - இடம்: டெல்லி
மே 21, 2025 - புதன் - இரவு 7:30 - மும்பை இந்தியன்ஸ் x டெல்லி கேபிடல்ஸ் - இடம்: மும்பை
மே 22, 2025 - வியாழன் - இரவு 7:30 - குஜராத் டைட்டன்ஸ் x லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - இடம்: அகமதாபாத்
மே 23, 2025 - வெள்ளி - இரவு 7:30 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு x சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - இடம்: பெங்களூரு
மே 24, 2025 - சனி - இரவு 7:30 - பஞ்சாப் கிங்ஸ் x டெல்லி கேபிடல்ஸ் - இடம்: ஜெய்ப்பூர்
மே 25, 2025 - ஞாயிறு - மாலை 3:30 - குஜராத் டைட்டன்ஸ் x சென்னை சூப்பர் கிங்ஸ் - இடம்: அகமதாபாத்
மே 25, 2025 - ஞாயிறு - இரவு 7:30 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் x கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - இடம்: டெல்லி
மே 26, 2025 - திங்கள் - இரவு 7:30 - பஞ்சாப் கிங்ஸ் x மும்பை இந்தியன்ஸ் - இடம்: ஜெய்ப்பூர்
மே 27, 2025 - செவ்வாய் - இரவு 7:30 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் x ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இடம்: லக்னோ
மே 28, 2025 - புதன் - இரவு 7:30 - - இடம்:
மே 29, 2025 - வியாழன் - இரவு 7:30 - குவாலிஃபயர் 1 (Qualifier 1) - இடம்: குறிப்பிடப்படவில்லை (TBC)
மே 30, 2025 - வெள்ளி - இரவு 7:30 - எலிமினேட்டர் (Eliminator) - இடம்: குறிப்பிடப்படவில்லை (TBC)
ஜூன் 01, 2025 - ஞாயிறு - இரவு 7:30 - குவாலிஃபயர் 2 (Qualifier 2) - இடம்: குறிப்பிடப்படவில்லை (TBC)
ஜூன் 03, 2025 - செவ்வாய் - இரவு 7:30 - இறுதிப் போட்டி (Final) - இடம்: குறிப்பிடப்படவில்லை (TBC)