மும்பை: ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி 2020ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதன்பின் 4 சீசன்கள் முடிவடைந்த போதும், மும்பை அணியால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவையும் கொண்டு வந்தது.
அப்படியிருந்த போதும் மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் பயிற்சியாளர் பவுச்சர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தனர். இதனால் மும்பை அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனிடையே டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.

இதனால் ரிக்கி பாண்டிங் அடுத்ததாக எந்த அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே மும்பை அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ள ரிக்கி பாண்டிங் மீண்டும் அந்த அணிக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் பேசுகையில், ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன்.
ஐபிஎல் தொடரில் ஒரு வீரராகவும் சரி, பயிற்சியாளராகவும் சரி எனக்கு சிறந்த நாட்களாக அமைந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணியுடன் பயணித்தேன். நாங்கள் விரும்பிய முடிவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. டெல்லி அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. இதனால் இந்திய பயிற்சியாளரை கொண்டு வர அந்த அணி நிர்வாகம் விரும்பினர். கடைசியாக பேசிய போதும், அதுதான் என்னிடம் கூறப்பட்டது.
ஐபிஎல் போட்டிகள் இல்லாத நாட்களிலும் இளம் வீரர்களுடன் நேரம் செலவிடும் வகையிலான பயிற்சியாளரை டெல்லி அணி நிர்வாகம் தேடி வருகின்றனர். ஆனால் என்னிடம் இந்தியாவில் அவ்வளவு நாட்கள் நேரம் செலவிட முடியாது. மகன் இன்னும் வளர்ந்து வருவதால், குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறேன். டெல்லி அணிக்காக பணியாற்றிய போது அற்புதமான வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளுடன் பணியாற்றிய திருப்தி கிடைத்தது.
அதற்காக நன்றிக் கடன்பட்டுள்ளேன். இப்போது சில வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. அதுகுறித்து 2 மாதங்களில் முடிவெடுப்பேன். ஆனால் ஐபிஎல் தொடரில் மீண்டும் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். தற்போதைய சூழலில் சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக செயல்பட முடியாது. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.