என்னைப் பார்த்தா எப்படி தெரியுது.. பொங்கிய ரிஷப் பண்ட்.. சுனில் கவாஸ்கருக்கு பதிலடி.. என்ன நடந்தது?
மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார் ரிஷப் பண்ட். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் சம்பளப் பிரச்சனை தான் எனவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால்தான் டெல்லி அணி அவரை விடுவித்து விட்டது எனவும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ பதிவை சுட்டிக்காட்டி ரிஷப் பண்ட் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். அவர் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரிலும் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என்றே பலரும் எண்ணினர்.

ஆனால், அணியின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரிஷப் பண்ட் வெளியேறிவிட்டார் என முதலில் கூறப்பட்டது. அவருக்கு ஏலத்தில் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் கவாஸ்கர் ஐபிஎல் ஏலம் பற்றிய நிகழ்ச்சியில் பேசுகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிச்சயம் ரிஷப் பண்ட்டை மீண்டும் ஏலத்தில் வாங்கி தங்கள் கேப்டனாக அறிவிக்கும் என்று கூறி இருந்தார்.
சில இந்திய வீரர்கள் தங்களுக்கு ஏலத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறார்கள்; அதனால்தான், ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து வெளியேறிவிட்டார் என சுனில் கவாஸ்கர் கூறி இருந்தார். அதாவது ரிஷப் பண்ட் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்ற ஒரே காரணத்தால் தான் விலகி விட்டதாக அவர் கூறி இருந்தார்.
அவரது பேச்சுக்கு ரிஷப் பண்ட் அளித்து இருக்கும் பதிலில், நிச்சயமாக பணத்திற்காக நான் வெளியேறவில்லை என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளருக்கும் ரிஷப் பண்ட்டுக்கும் வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முந்தைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை நீக்கிய பின் பயிற்சியாளர் நியமனத்தில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சில செய்திகள் முன்பே வெளியாகி இருந்தன. ஹேமங் பதானியை டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்ததில் ரிஷப் பண்ட்டுக்கு உடன்பாடு இல்லை என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரிஷப் பண்ட் தனக்கு பணம் இரண்டாம் பட்சம்தான் என்பதையும் சூசகமாக உணர்த்தி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications