சென்னை: குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். இதன் காரணமாக எந்த அணியைச் சேர்ந்த வீரர்களும் எந்த அணிக்கும் மாறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பிராண்ட் வேல்யூ கொண்ட வீரர்கள் இருந்தால், தங்கள் அணிகளின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
இதனால் ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களின் இடத்தை நட்சத்திர வீரர்களை கொண்டு நிரப்பவே விரும்புகிறார்கள். அதன்படி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், சிஎஸ்கே அணியின் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இல்லையென்றால் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

இதனால் இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக தோனியுடன் நெருங்கிய நட்பில் ரிஷப் பண்ட் உள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் சிஓஓ சுந்தர் ராமனுடன் ரிஷப் பண்ட் நட்பு பாராட்டி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனால் டெல்லி அணி நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செய்திகளை டெல்லி அணி நிர்வாகம் மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது. டெல்லி அணி மற்றும் ரிஷப் பண்ட் இடையிலான உறவு நன்றாக இருப்பதாகவும், ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணியால் தக்கவைக்கப்படும் பட்டியலில் முதல் 2 வீரர்களின் பெயராக ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேலின் பெயர்கள் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை தக்க வைக்க டெல்லி அணி விரும்புவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை ஜேக் ஃபிரேசர் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரில் ஒருவரையும் டெல்லி அணி தக்க வைக்க விரும்புவது தெரிய வந்துள்ளது. ஆனால் அவர்களின் ஊதியம் குறித்து முடிவெடுப்பதில் சிரமங்கள் இருப்பதால், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு ரிஷப் பண்ட் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.