டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என சில மாதங்களாக ஒரு நம்பகமற்ற தகவல் பரவி வந்தது. அதற்கு சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ஏலத்திற்கு முன்னதாகவே அவர் சிஎஸ்கே அணிக்கு மாறலாம் எனவும் வல்லுநர்கள் கருத்து கூறி இருந்தனர்.
ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியால் தக்க வைக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி ஆறாவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து இருந்தார்.

சுமார் 18 மாதங்களுக்கு பின் பின் டெஸ்ட் அணிக்கு திரும்பி இருந்த அவர் தான் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து தனது டெஸ்ட் போட்டி ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் அவரை தங்கள் அணியில் நிச்சயமாக தக்க வைக்கப் போவதாக முடிவு செய்து உள்ளது.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருப்பார் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார். அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில் அது நீட்டிக்கப்படவில்லை. 7 ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளரை மாற்றினாலும் கேப்டனாக ரிஷப் பண்ட்டை தக்க வைக்க அந்த அணி முடிவு செய்துள்ளது. 2025 ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் ரிஷப் பண்ட் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிகிறது. முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகத்துக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் இடையே சம்பள விவகாரத்தில் சில முரண்பாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தற்போது அந்த முரண்பாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், தற்போது அவர் வாங்கும் 16 கோடி சம்பளத்துக்கும் அதிகமான தொகைக்கு அவர் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி அணி முதல் வீரராக ரிஷப் பண்ட்டை தக்க வைக்கும் எனவும், அடுத்த இரண்டு வீரர்களாக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தக்க வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஜேக் பிரேசர் மெக்கிர்க் மற்றும் தென்னாபிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரையும் தக்க வைக்க வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் வீரர் ஒருவரை தக்க வைக்க அனுமதி கிடைத்தால் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் அபிஷேக் போரலை தக்க வைக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 155 ஆக இருந்தது. அந்த அணிக்காக அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார் ரிஷப் பண்ட்.