பெங்களூர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ராபின் உத்தப்பா மீது ஊழியர்களின் பிராவிடன்ட் ஃபண்ட் நிதியை அவர்கள் கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில், அது குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து இருக்கிறார். பி.எஃப் பணத்தை செலுத்தாத குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் நிறுவனங்களில் இருந்து தான் விலகி பல ஆண்டுகள் ஆகிறது என்றும், அந்த நிறுவனத்தில் தான் எந்த நிர்வாக ரீதியான பணியிலும் இதுவரை செயல்பட்டதில்லை எனவும் ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து இருக்கிறார்.

சென்ட்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முன்பு ராபின் உத்தப்பா இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்த நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் நிதியிலிருந்து சுமார் 23 லட்சம் ரூபாயை ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் செலுத்தவில்லை.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருந்த ராபின் உத்தப்பாவுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது பற்றி ராபின் உத்தப்பா அளித்து இருக்கும் விளக்க அறிக்கை -
"எனக்கு எதிராக பி.எஃப் வழக்கு ஒன்று குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அது பற்றி சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். ஸ்ட்ராபெரி லென்சேரியா பிரைவேட் லிமிடெட், சென்ட்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட், பெர்ரிஸ் ஃபேஷன் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்."
"2018 - 19 ஆம் ஆண்டில் நான் கடன் கொடுத்ததன் அடிப்படையில் இந்த மூன்று நிறுவனங்களிலும் இயக்குனராக நியமிக்கப்பட்டேன். ஆனால், இந்த நிறுவனங்களில் நான் எந்தவிதமான நிர்வாக ரீதியான பணியிலும் ஈடுபடவில்லை. அந்த நிறுவனங்களின் வியாபாரத்தில், தினசரி நிர்வாக நடவடிக்கைகளில் நான் எப்போதும் ஈடுபட்டதில்லை."
"நான் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராகவும், தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் அதிக பணிச் சுமையுடன் இருந்து வந்தேன். எனக்கு வியாபாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு நேரமும் இல்லை, அது குறித்த அனுபவமும் இல்லை. நான் இந்த நிறுவனங்களுக்கு நிதி அளித்தேன். ஆனால், இன்றுவரை எந்தவிதமான நிர்வாக ரீதியிலான பணியையும் நான் மேற்கொள்ளவில்லை."
"அந்த நிறுவனங்கள் நான் அளித்த கடனை எனக்குத் திரும்ப செலுத்தவில்லை என்பதுதான் இதில் சோகமான விஷயம். அந்த நிறுவனங்கள் மீது நான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை துவக்கி இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிறுவனங்களின் இயக்குனர் பதவிகளில் இருந்து நான் விலகிவிட்டேன்."
"பிராவிடன்ட் ஃபண்ட் அதிகாரிகள் பி.எஃப் நிதியில் உள்ள மீதத் தொகைக்காக எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். எனது சட்ட வல்லுநர் குழுவினர் அதற்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அந்த நிறுவனங்களில் எனக்கு எந்த விதமான பங்கும் இல்லை என்பதை ஆதாரங்களுடன் அவர்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அப்படி இருந்தும் பிராவிடண்ட் ஃபண்ட் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த விவகாரத்தை முடித்து வைக்க எனது சட்ட ஆலோசகர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்." என ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து இருக்கிறார்.