கவுஹாத்தி: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது. இது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ரியான் பராக்கின் சொந்த மாநிலமாகும்.
இந்தப் போட்டியில் ரியான் பராக் பந்து வீசிக் கொண்டிருந்தபோது, ஒரு ரசிகர் மைதானத்தில் அத்துமீறி ஆடுகளத்தில் நுழைந்து, ஓடி வந்தார். அப்போது ரியான் பராக் பந்து வீச ஓடி வந்தார். பின்னர் அவரை ராஜஸ்தான் வீரர்கள் எச்சரித்ததை அடுத்து பந்து வீசுவதை நிறுத்தி விட்டு பின்னே பார்த்தார்.

அப்போது வேகமாக ஓடி வந்த அந்த ரசிகர் நேராக ரியான் பராக் அருகே வந்து அவரை கட்டி அணைத்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்தக் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி, கே.எல்.ராகுல் ஆகியோரை ரசிகர்கள் கட்டி அணைத்து, காலில் விழுந்து வணங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
முதன்முறையாக 23 வயதான வீரர் ஒருவரை, ஒரு ரசிகர் காலில் விழுந்து வணங்கியதும், கட்டி அணைத்ததும் அவருக்காக மைதானத்தில் அத்துமீறி நுழைந்ததும் எப்படி சாத்தியம்? எனப் பலரும் வியப்பின் உச்சிக்குச் சென்றனர். ரியான் பராக்கிற்கு இவ்வளவு தீவிரமான ரசிகரா? எனப் பலரும் வியந்தனர்.
இதற்கு முக்கிய காரணமே, அசாம் மாநிலத்தில் ரியான் பராக் ஒரு நட்சத்திரமாக இருப்பதுதான். அசாம் மாநிலத்தில் இருந்து தேசிய அளவில் வளர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தான். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நீண்ட காலமாக ஆடி வருவதோடு, சமீபத்தில் இந்திய அணியிலும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
அவரது கிரிக்கெட் வளர்ச்சி அசாம் மாநிலத்தில் பலருக்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே ரசிகர் ஒருவர் அத்துமீறி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இதை கேலி செய்தும் வருகின்றனர்.
மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இது போன்ற ரசிகர்கள் இல்லையே எனவும், ரியான் பராக்கிற்கு மிகப்பெரிய வாழ்க்கை தான் எனவும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது. ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கும் நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கிறது.
செய்தி சுருக்கம்: