சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ருதுராஜ் கெய்க்வாட். 2024 ஐபிஎல் தொடரில் அவர் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.
அந்தப் போட்டியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த போட்டியுடன் 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் முடிவுக்கு வந்தன. தற்போது அந்த இடத்தில் இருந்து 2025 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராக வேண்டும். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களையும், அணியையும் எல்லை மீறி கேலியும், கிண்டலும் செய்து இருந்தனர்.

அதற்கு பழி தீர்க்கும் வகையில் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது அதிக விமர்சனங்கள் எழவில்லை. ஆனால், அந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்வி அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தனது முதல் தொடரில் 14 லீக் போட்டிகளில் ஏழு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் 2025 ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை பெற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு களத்தில் ஆலோசனைகள் வழங்கி இருந்தார். அது அந்த அணிக்கு பெரிய உத்வேகமாகவும் இருந்தது. இந்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு, தோனி இல்லாமல் ஆட வேண்டிய நிலை என ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக அழுத்தம் உள்ளது. ஐந்து முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஜாம்பவான் தோனியின் இடத்தை அவர் நிரப்ப வேண்டிய கட்டாயமும் உள்ளது. அந்த பெரிய எதிர்பார்ப்பை அவர் எப்படி பூர்த்தி செய்யப் போகிறார்?
தனிப்பட்ட முறையில் ருதுராஜின் பேட்டிங் திறன் அபாரமாக உள்ளது. ஆனால், அவரது கேப்டன்சி இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும். அதற்காகவே தோனி நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறி இருந்தார். தோனி அணியில் இடம்பெற்றால் நிச்சயமாக அது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும். அணியை ஒருங்கிணைத்து கொண்டு செல்லவும் அது ருதுராஜிற்கு உதவும்.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் எந்த வீரர்களை வாங்கலாம் என ருதுராஜ் கெய்க்வாட் ஆலோசனைகள் அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். அவர் தனக்கான அணியை தானே தேர்வு செய்து கொள்ள முடியும். இங்கிருந்தே அவரின் 2025 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தொடங்க உள்ளன.