டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவரே இருக்கிறார். அவர் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் 617 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 56.09 ஆகவும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 156.9 ஆகவும் உள்ளது.
சாய் சுதர்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்து துவக்க வீரராக விளையாடி வரும் நிலையில், அதே அணியின் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில்லும் அவருக்கு ஈடாக ரன் குவித்து வருகிறார். சுப்மன் கில் 12 இன்னிங்ஸ்களில் 601 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 60.1 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 155.69 ஆகவும் உள்ளது. இருவரும் ரன் குவிப்பதிலும், சராசரியிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று போட்டி போட்டு விளையாடுகிறார்கள்.

ஆனால், இதில் சாய் சுதர்சன் அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. சுப்மன் கில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், இவர்கள் இருவரில் யார் நல்ல பேட்ஸ்மேன் என்பதை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா ஒப்பிட்டு விவரித்து இருக்கிறார்.
சுப்மன் கில்லை விட சாய் சுதர்ஷன் சிறப்பாக பேட்டிங் செய்வதாகவும், சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவ பேட்ஸ்மேன் போல ஆடுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரது பேட்டிங் பற்றி அஜய் ஜடேஜா பேசியதாவது:
"சாய் சுதர்ஷன் எதிர்கால இந்தியக் கேப்டனை விடச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் ரசிக்கும்படியாக உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பேட்டிங் சுப்மன் கில்லை விட சிறப்பாக இருந்தது. சுப்மன் கில்லுக்கு இதற்கு முன்னாடியே போட்டிகளில் சுப்மன் கில் ஆடியதை விட சாய் சுதர்சன் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்து இருந்தார்.
சாய் சுதர்சனின் பேட்டிங் சுப்மன் கில்லுடன் ஒப்பிடும்போது அதிக ஆபத்து இல்லாத முறையில் இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரரைப் போல சாய் விளையாடுகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லால் பந்தை சரியான நேரத்தில் கணித்து அடித்து ஆட முடியவில்லை.
எனவே, அவர் அதிரடியான ஷாட்களை அடித்துத் தனது ரன்களைச் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், சாய் சுதர்சனுக்கு அந்த நிலை ஏற்படவில்லை. அவர் மிகவும் எளிதாகப் பந்துவீச்சை எதிர்கொண்டார்" இவ்வாறு அஜய் ஜடேஜா ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் விரைவில் இடம் அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.