பஞ்சாப் கிங்ஸ்-ஐ சரமாரியாக திட்டிய சிஎஸ்கே வீரர் சாம் கரன்.. அவுட்டான உடன் பொங்கிய சுட்டிக் குழந்தை
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சாம் கரன், ஒரு போட்டியில் ஆட்டமிழந்த பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை வசைபாடியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சாம் கரன் அதிரடியாக விளையாடினார். அவர் 47 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்தார்.

18வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். மார்கோ யான்சென் வீசிய பந்தில், விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லிஸ் இடம் கேட்ச் கொடுத்து சாம் கரன் அவுட்டானார். அவரது பேட்டில் பட்டு எட்ஜாகி பந்து விக்கெட் கீப்பர் இங்லிஸ் இடம் சென்றது. அவர் ஆட்டமிழந்தது உறுதியான நிலையில், சாம் கரன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சில அடி தூரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களும் நிர்வாகத்தினரும் அமர்ந்திருந்தனர். ஆடுகளத்தை விட்டு வெளியேறும் போது அவர்களை நோக்கி சாம் கரன் வசைபாடிக்கொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக பாதியில் விலகியபோது, சாம் கரன் பல போட்டிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அப்போது அவர் நன்றாக விளையாடியபோதும், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அவரை 2025 ஏலத்திற்கு முன் தக்கவைக்கவில்லை.
இரண்டு உள்ளூர் வீரர்களை மட்டும் தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் அந்த அணி வெளியேற்றியது. மேலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தலைமையில் புதிய அணியை கட்டமைத்தது. அதற்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரையும் நியமித்தது. இந்த வியூகம் இந்த ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறது. பஞ்சாப் அணி இந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பெற்று இருக்கிறது.
இதனிடையேதான், இந்தப் போட்டியில் ஆட்டமிழந்த பிறகு சாம் கரன் தனது முந்தைய அணியான பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை பார்த்து வசைபாடி இருக்கிறார். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை, தான் அவுட் ஆகவில்லை என கருதியதால் இவ்வாறு நடந்துகொண்டாரா அல்லது தன்னை அந்த அணி தக்கவைக்கவில்லை என்ற கோபத்தில் இவ்வாறு நடந்துகொண்டாரா என்பதுதான் தற்போது விவாதமாக உள்ளது.
இந்தப் போட்டியில் சாம் கரன் அபாரமாக ஆடிய நிலையிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications