சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றி பெறும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடவில்லை என முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கும். ஆனால் தோல்வியடையும் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலை உள்ளது.

இந்த முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றி பெறும் என சஞ்சய் பங்கர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றி பெறும் என நான் நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சு பலமாக உள்ளது. அதை தோனி மிகவும் நம்புகிறார். எனவே சேப்பாக்கத்தில் அவர்கள் சுழற் பந்துவீச்சாளர்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி இருந்தாலும் இப்போது முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. மறுபுறம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒவ்வொரு போட்டியிலும் நிலையற்ற முறையில் விளையாடி வருகிறது" என்றார் சஞ்சய் பங்கர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தனை காலமாக அனுபவ வீரர்களை அதிக அளவில் நம்பி வந்தது. அதற்காக 30 வயதைத் தாண்டிய வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்து வந்தது. ஆனால் இந்த முறை 17 வயதான ஆயுஷ் பதோனி, 20 வயதான ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.