மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பேட்ஸ்மேனுக்கு ஒரு திருவிழா போல் இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை அதிக முறை 200 ரன்களுக்கு மேல் அணியின் ஸ்கோர் அடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஆடுகளம் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக 200 ரன்கள் அடிக்கும் விகிதம் தற்போது குறைந்த தொடங்கி இருக்கின்றது. மேலும் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தப்படும் பேட்டின் அளவும் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் டாப் 10 பேட்ஸ்மேன்கள் யார் என்பது குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர், ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர் ஏதேனும் கருத்து தெரிவித்தால், அதற்கு எப்போதும் பெரும் விமர்சனம் எழும். சஞ்சய் மஞ்சுரேக்கர் சில சமயம் நல்ல கருத்தை தெரிவித்து இருந்தால் கூட அவரை போட்டு அடிப்பதற்காகவே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.இந்த நிலையில் எப்படி வடிவேலு, வாண்டட் ஆக நான் ஜெயிலுக்கு போறேன் என்று வண்டியில் ஏறுவாரோ அதேபோல் சஞ்சய் மஞ்சுரேக்கர் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.
அதாவது நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய பத்து பேட்ஸ்மேன்கள் லிஸ்ட்டை சஞ்சய் மஞ்சுரேக்கர் வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கியமான ஒரு வீரரின் பெயர் இல்லாததுதான் தற்போது ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் சஞ்சய் மஞ்சுரேக்கர் முதலில் குறிப்பிட்டிருப்பது கே எல் ராகுலை தான். டெல்லி அணிக்காக விளையாடும் கே எல் ராகுல் ஹைதராபாத் மற்றும் ஆர் சி பி, சிஎஸ்கே ஆகிய அணிகளுக்கு எதிராக அபாரமாக விளையாடினார்.
இதன் மூலம் டெல்லி அணி வெற்றி பெற்றது. தற்போது வரை கே எல் ராகுல் 5 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 238 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 93 ஆகும். கே எல் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் 154 என்ற அளவில் இருக்கின்றது. கே எல் ராகுல் இந்த தொடரில் 12 சிக்ஸர்களும், 18 பவுண்டரிகளும் அடித்திருக்கிறார். அடுத்ததாக சஞ்சய் மஞ்சுரேக்கர் ஜாஸ் பட்லரின் பெயரை தான் குறிப்பிட்டுள்ளார். ஜாஸ் பட்லர் நடப்பு தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி 218 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 43 என்ற அளவில் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 157 என்ற அளவில் இருக்கிறது.எனினும் பட்லர், தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. இதேபோன்று பிரியான்ஸ் ஆர்யா பெயரை சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்திருக்கிறார். சிஎஸ்கே அணிக்கு எதிராக அபாரமாக சதம் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது அவர் ஆறு போட்டிகளில் 216 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதேபோன்று அபிஷேக் ஷர்மாவின் பெயரையும் சஞ்சய் மஞ்சுரேக்கர் குறிப்பிட்டு இருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக்சர்மா 141 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஏழு போட்டிகளில் 232 ரன்கள் அபிஷேக் ஷர்மா அடித்திருக்கிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் கூட அபிஷேக் ஷர்மா நல்ல தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
அபிஷேக் சர்மா 31 பவுண்டரிகளும், பத்து சிக்ஸர்களையும் நடப்பு தொடரில் அடித்திருக்கிறார். இதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர் கிளாசன் பெயரையும் சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்து இருக்கிறார். கிளாசன் இந்த சீசனில் பெரிய ஸ்கோர் எதையும் அடிக்கவில்லை என்றாலும் 7 போட்டிகளில் விளையாடி 210 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 35 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 159 என்ற அளவில் இருக்கிறது.
நடப்பு தொடரில் அவர் 18 பவுண்டரிகளையும் பத்து சிக்சர்களையும் அடித்திருக்கின்றார். இதேபோன்று ஸ்ரேயாஸ் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சஞ்சய் மஞ்சுரேக்கரை தேர்வு செய்திருக்கிறார். ஸ்ரேயாஸ் 250 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய சராசரி 62 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 204 என்று அளவில் உள்ளது.இந்த தொடரில் ஸ்ரேயாஸ் 16 பவுண்டரிகளையும் 20 சிக்ஸர்களையும் அடித்து இருக்கின்றார்.
இதேபோன்று ஆர்சிபி வீரர் பில் சாட்டையும் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்துள்ளார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள பில் சால்ட் மொத்தமாக 208 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 34 என்ற அளவில் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 185 என்று அளவிலும் உள்ளது. பில் சால்ட் 25 பவுண்டரிளையும் பதிமூன்று சிக்சர்களையும் இந்த தொடரில் அடித்துள்ளார். லக்னோ அணிக்காக தொடக்க வீரராக விளையாடும் மிட்செல் மார்ஷ் பெயரும் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
நடப்பு தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 295 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரி 49 என்ற அளவில் இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 171 என்ற அளவில் உள்ளது.இதில் 30 பவுண்டரிகளும், 17 சிக்சர்களும் அடங்கும். சஞ்சய் மஞ்சுரேக்கர் பட்டியலில் சன்ரைசர்ஸ் வீரர் டிராவிஸ் ஹெடுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. டிராவிஸ் ஹெட் நடப்பு தொடரில் பெரிய தாக்கத்தை எதுவும் இதுவரை ஏற்படுத்தவில்லை.
7 போட்டிகளில் விளையாடி 242 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 34 என்ற அளவில் இருக்கின்றது.
இந்த தொடரில் 33 பவுண்டரிகளும், ஒன்பது சிக்ஸர்களும் அடித்துள்ளார். சஞ்சய் மஞ்சுரேக்கர் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் நிக்கோலஸ் பூரான். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிகள் மட்டும் தான் நிக்ரோஸ் பூரான் பெரியஸ்கோர் அடிக்கவில்லை. மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 357 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் சராசரி 59 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 208 என்ற அளவில் உள்ளது. பூரான் தனி ஆளாக 31 சிக்சர்களை அடித்து இருக்கிறார். 28 பவுண்டரிகளையும் விளாசி இருக்கிறார். சஞ்சய் மஞ்சுரேக்கரின் இந்த பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பெறாதது தான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தொடரில் விராட் கோலி 6 போட்டிகளில் விளையாடி 248 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் விராட் கோலியின் சராசரி 62 என்று அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 143 என்று அளவில் இருக்கிறது. விராட் கோலி இந்த தொடரில் 20 பவுண்டரி 10 சிக்சர் அடித்திருக்கிறார். நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்திருப்பவர்கள் பட்டியலில் விராட் கோலி ஆறாவது இடத்தில் உள்ளார். ஆனால் விராட் கோலியின் பெயரை சஞ்சய் மஞ்சுரேக்கர் வேண்டுமென்றே நீக்கி விட்டதாக ரசிகர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
விராட் கோலியை விட குறைவான ரன்கள் அடித்தவர்கள் பெயர்கள் எல்லாம் இந்த பட்டியலில் உள்ள நிலையில் விராட் கோலியை வேண்டுமென்றே சஞ்சய் மஞ்சுரேக்கர் இருட்டடிப்பு செய்து இருப்பதாக ரசிகர்கள் குறை கூறியுள்ளனர். விராட் கோலி இதற்கு மேல் எப்படி தான் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் சஞ்சய் மஞ்சுரேக்கர் குறிப்பிட்ட வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட் 150 மேல் உள்ளது. ஆனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 143 என்ற அளவில் தான் இருக்கிறது.இதனால் அது பெரிய தாக்கத்தை நவீன டி20 கிரிக்கெட்டில் ஏற்படுத்தவில்லை. இதனால் தான் சஞ்சய் மஞ்சுரேக்கர் விராட் கோலியின் பெயரை குறிப்பிடவில்லை என்று தெரிகிறது.