சஞ்சு சாம்சனுக்கு அபராதம்.. தோல்வியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவு.. என்ன நடந்தது?
அகமதாபாத்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டி சம்பளத்தில் 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால், ஸ்லோ ஓவர் ரேட் விதியின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த அணியின் வீரர் ரியான் பராக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது கேப்டனாக செயல்பட்ட போது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசி முடிக்காததற்காக 12 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினார்.

அவருக்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தற்போது செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட் விதியை மீறி இருப்பதால், தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அணியில் இடம்பெற்ற பிளேயிங் லெவனில் இருந்த வீரர்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் அல்லது 25 சதவீத போட்டி சம்பளம் ஆகியவற்றில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது. சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன் 41 ரன்கள், ரியான் பராக் 26 ரன்கள், ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்கள் சேர்த்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications