மும்பை: 2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் யாரும் தன்னை ஏலத்தில் வாங்க முன்வராத போது, சஞ்சு சாம்சன் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியதாக அனுபவ வீரர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனின் வார்த்தைகள் தனது எழுச்சிக்கு காரணமாக இருந்ததாக கூறியுள்ள அவர், ராஜஸ்தான் அணியில் வாய்ப்பு கொடுத்ததும் அவர் தான் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகளில் இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் ஏராளமான சீனியர் வீரர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடி 5 ஆண்டுகளை கடந்துவிட்ட வீரர்கள், ஏலத்தில் அன்-கேப்ட் வீரர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி தோனிக்காக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தோனி மட்டுமல்லாமல் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, குஜராத் அணியின் மோகித் சர்மா, ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா உள்ளிட்ட வீரர்களும் பயனடைவார்கள். இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தான் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்து பேசியிருக்கிறார். 2013 முதல் 2018 வரை பஞ்சாப் அணிக்காக ஆடிய அவர், 56 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதன்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடிய அவர் 48 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணிக்காக புதிய பந்தில் பவுலிங் செய்யக் கூடிய பவுலராக சந்தீப் சர்மா இருந்து வந்தார். ஆனால் 2023ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சந்தீப் சர்மாவை வாங்குவதற்கு எந்த அணியும் முன் வரவில்லை.
இதுகுறித்து சந்தீப் சர்மா பேசுகையில், ஐபிஎல் ஏலத்தில் யாரும் என்னை வாங்க முன்வராத போது, சஞ்சு சாம்சனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் சஞ்சு சாம்சன் எனக்கு ஆதரவாக பாசிட்டிவான விஷயங்களை பேசி ஆறுதல் கூறினார். நான் ஏலத்தில் வாங்கப்படாதது சோகம் அளிப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் நிச்சயம் இந்த சீசனில் நீங்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பேன் என்று உறுதி அளித்தார். அனைத்து அணிகளிலும் ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக அவதியடைந்து வருவதாக கூறிய அவர், நிச்சயம் உங்களுக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்கும் என்றார். தொடர்ச்சியாக என்னுடன் பேசி கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் அதுதான் எனக்கும் தேவையாக இருந்தது.
திடீரென ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமிற்கு வருமாறு அழைத்தார். அப்போது ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா காயமடைந்தார். அப்போது என்னை உடனடியாக ஒப்பந்தம் செய்து, வாய்ப்பு அளித்தனர். அதன்பின் ஒவ்வொரு போட்டியையும் எனது கடைசி போட்டியாக நினைத்து விளையாடி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2 சீசன்களில் ராஜஸ்தான் அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய சந்தீப் சர்மா, மொத்தமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் மெகா ஏலத்திற்கு முன்பாக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சந்தீப் சர்மாவுக்கு ரூ.4 கோடி கொடுத்து ரிடெய்ன் செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.