மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் 13 வயதாகும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசி இருக்கிறார். ஏற்கனவே ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் உள்ளிட்டோரை சிறு வயதில் ஒப்பந்தம் செய்ததை போல், வைபவ் சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயதான சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்தது. டெல்லி அணியும் வைபவ் சூர்யவன்ஷியை வாங்குவதற்கு தீவிரமாக போட்டி போட்டது கூடுதல் ஆச்சரியத்தை கொடுத்தது. இதன்பின் வைபவ் சூர்யவன்ஷி இந்திய யு19 அணிக்காக விளையாடியது பலருக்கும் வியப்பை அளித்தது.

இதனால் விரைவில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படும் முக்கியமான பெயராக வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் இருக்கும் என்று பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் குமார் சங்கக்காரா இருவரின் பயிற்சியின் கீழ் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் மிகப்பெரிய எழுச்சியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 13 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷியை ஒப்பந்தம் செய்ததற்கான காரணம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசுகையில், வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்துள்ளேன். அதேபோல் ராஜஸ்தான் அணி நிர்வாகத்தில் முடிவு எடுக்கும் குழுவில் உள்ள பலரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான யு19 ஆட்டத்தை நேரில் பார்த்தனர்.
சென்னையில் நடந்த அந்த ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி 60, 70 பந்துகளுக்குள் சதம் விளாசி இருக்கிறார். அந்த சதத்தை விடவும், வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ஷாட்கள் தான் அவரை ஸ்பெஷலாக காட்டி இருக்கிறது. அவரை போன்ற வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த அளவிற்கு செல்கிறார்கள் என்பதையும் பார்க்க விரும்புகிறேன்.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறு வயதிலேயே இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வது புதிய விஷயமல்ல. அவர்கள் திறமையாளர்களை தேடி சாம்பியன் வீரர்களாக மாற்றி காட்டுவார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வீரராக ராஜஸ்தான் அணிக்குள் வந்தார். இப்போது இந்திய அணியின் ராக்ஸ்டாராக இருக்கிறார். ரியான் பராக், துருவ் ஜுரெல் உள்ளிட்டோரும் அப்படி தான் கொண்டு வரப்பட்டனர்.
ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இப்படியான வீரர்களை கண்டுபிடித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்வது பிடித்திருக்கிறது. நாங்கள் ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டும் என்பது முக்கியம் தான். அதேபோல் இந்திய அணிக்கு சாம்பியன் வீரர்களையும் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்திக்கவும் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.