"நான் செய்த செயலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும்" ஷஷாங்க் சிங் மனம் திறப்பு!
சண்டிகர்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் ஷஷாங்க் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் செய்த தவறுக்காக தன்னை அறைந்திருக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். என்ன நடந்தது, ஷஷாங்க் சிங் என்ன சொன்னார்? என்று பார்க்கலாம்.
2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றில் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் சேசிங் செய்து கொண்டிருந்த போது முக்கியமான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஷஷாங்க் சிங் பேட்டிங் செய்தார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன் ஓடி வருமாறு அவசரமாக ஷஷாங்க் சிங்கை அழைத்தார். மறுமுனையில் இருந்த ஷஷாங்க் சிங் மிகவும் சாவகாசமாக ஓடினார். அதனால் ரன் அவுட் ஆனார்.

17 வது ஓவரில் நடந்த அந்த ரன் அவுட் நிகழ்வு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகத்தை அளித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் மறுமுனையில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங் மீது கடும் கோபமடைந்தார். அந்தப் போட்டியில் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அந்தப் போட்டிக்குப் பிறகு ஷஷாங்க் சிங் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கைகுலுக்க வந்தபோது, ஸ்ரேயாஸ் ஐயர் அவரைத் திட்டினார். மேலும், தன் முன்னே வர வேண்டாம் என அவரிடம் கோபமாகச் சொன்னார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அது குறித்து ஷஷாங்க் சிங் பேசி இருக்கிறார். "எனக்கு அது தேவை தான். ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும். நான் செய்த தவறுக்காக இறுதிப்போட்டி வரும் வரை எனது தந்தை என்னுடன் பேசவில்லை. நான் அந்த ரன் அவுட்டின் போது மிகவும் சாவகாசமாக நடந்து கொண்டிருந்தேன். தோட்டத்தில் நடப்பது போல கூட இல்லை, ஒரு கடற்கரையில் நடந்து செல்வது போல சென்றேன்."
"அது மிகவும் முக்கியமான கட்டம். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் என்னிடம் 'நான் இதை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை' என்று சொன்னார். பின்னர் அவர் என்னை இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார்," இவ்வாறு ஷஷாங்க் சிங் கூறி இருக்கிறார்.
மேலும், ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பற்றி ஷஷாங்க் சிங் பாராட்டி பேசி இருக்கிறார். "நான் மற்றவர்களிடம் பேசிய வரையிலும், நான் பார்த்த வரையிலும் இப்போது உலக கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயரை விட சிறந்த கேப்டன் இல்லை. அவர் அனைவரையும் சரிசமமாகப் பார்க்கிறார். அனைவருக்கும் சுதந்திரம் அளிக்கிறார். அவரிடம் ஆணவமான குணாதிசயம் இருப்பதாக யாரும் இதுவரை சொல்லவில்லை."
"அவர் ஓய்வறையில் இளம் வீரர்களுடன் எளிதாகப் பழகக் கூடியவராக இருப்பார். போட்டியின் போது யார் வேண்டுமானாலும் அவர்களது யோசனைகளை என்னிடம் சொல்லலாம் எனக் கூறிய ஒரே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே. அந்த அறிவுரை சரியானதாக இருந்தால் அவர் அதை எடுத்துக்கொள்வார். இந்த விஷயம் மிகவும் அரிதானது," என்றார் ஷஷாங்க் சிங்.


Click it and Unblock the Notifications