IPL 2025: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் நியமனம்.. சல்மான் கான் அறிவிப்பு.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் பதவி
மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி கோப்பை வென்றதில்லை.
2008 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அரை இறுதி வரை முன்னேறி இருந்தது. 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தது. மற்ற 15 ஐபிஎல் தொடர்களில் அந்த அணி லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களில் கூட இடம் பிடித்தது இல்லை.

இந்த நிலையில் 2024 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கியது. ஸ்ரேயாஸ் ஐயர் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அந்த அணிக்கு கேப்டனாக கோப்பை வென்று கொடுத்தார்.
அவர் மெகா ஏலத்துக்கு முன்னதாக அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு விலகியதாக சொல்லப்பட்டது. அவர் எதிர்பார்த்தது போலவே ஏலத்தில் அவருக்கு 26.75 கோடி சம்பளமாக கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை அத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கியது.
அப்போதே ஸ்ரேயாஸ் ஐயரைதான் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக நியமிக்கும் என கூறப்பட்டது. பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோடி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற அறிவிப்பை சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார் என்பதும் சுவாரசியமான விஷயமாக உள்ளது. முதன்முறையாக ஒரு ஐபிஎல் அணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்து தங்கள் கேப்டனை அறிமுகம் செய்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications