525 சதுர அடி வீட்டின் விலை 2.90 கோடி.. ஒரு சதுர அடி 55000.. தாய் பெயரில் வீடு வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்
மும்பை: சமீபத்தில் இந்திய அணியில் தனது இடத்தை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது தாயுடன் இணைந்து 2.90 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். வெறும் 525 சதுர அடி மட்டுமே கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலை 2.90 கோடி என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகம் என்பதால் இத்தனை விலை கொடுத்து ஒரு சிறிய வீட்டை அவர் வாங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது தாயார் ரோகிணி ஆகியோரது பெயரில் மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இந்த வீட்டை வாங்கி இருந்தார்.

இந்த வீட்டின் மதிப்பு தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் வாங்கிய வீட்டின் ஒரு சதுர அடிக்கான விலை மட்டுமே 55,238 ரூபாய் ஆகும். பத்திரப்பதிவுக்கான செலவு மட்டுமே 17.70 லட்சம் ஆகும். இதற்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள வேர்ல்ட் டவர்ஸ் என்ற மிகப்பெரும் குடியிருப்பின் 48 வது மாடியில் ஒரு வீட்டை வாங்கி இருந்தார்.
அந்த வீட்டின் மதிப்பு 11 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 2380 சதுர அடி கொண்ட அந்த வீட்டின் ஒரு சதுர அடி மதிப்பு 49,817 ரூபாய் ஆகும். சமீபத்தில் இந்திய அணியின் ஒப்பந்தத்தை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலும் தனது வாய்ப்பை இழந்து இருக்கிறார். அதனால் சில கோடி வருமானத்தை அவர் இழந்து இருக்கிறார்.
தற்போது உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த நிலையிலும் அவர் பல கோடிகளை கொட்டிக் கொடுத்து வீடு வாங்கி இருப்பது குறித்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், அவர் ஐபிஎல் தொடரிலேயே பல கோடிகளை சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய அணியில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வந்ததால் பல கோடிகளை சம்பளமாக பெற்று இருக்கிறார். விளம்பரங்கள் மூலமும் அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த பணம் என்பது அவருக்கு ஒரு சிறு தொகையாகவே இருக்கும். 2024 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது. ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்று இருக்கிறார்.


Click it and Unblock the Notifications