IPL 2025: KKR அணியில் நடந்த விஷயம்.. டீமை விட்டு வெளியேற காரணமே இதுதான்.. ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்
மும்பை: 2024 ஐபிஎல் தொடரை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அப்படி இருந்தும் அவர் அந்த அணியில் இருந்து விலகி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் அவரை 26.75 கோடிக்கு வாங்கியது.
ஐபிஎல் கோப்பை வென்ற பின்னரும் கொல்கத்தா அணியை விட்டு கேப்டன் ஸ்ரேயாஸ் விலகியது நம்ப முடியாத விஷயமாக இருந்தது. அது ஏன்? என தற்போது ஸ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்து இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தன்னை தக்க வைப்பது பற்றி 2024 ஐபிஎல் முடிவில் பேசியதாகவும், அதன் பின் 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அளிக்க வேண்டிய கடைசி ஒரு வாரம் இருக்கும் போது மீண்டும் அது குறித்து பேசியதாகவும் கூறி இருக்கிறார் ஸ்ரேயாஸ்.

வெறும் ஒரு வாரம் இருக்கும் போது தான் அந்த அணி நிர்வாகம் வீரர்களை தக்க வைப்பது பற்றி பேசுகிறது என்றால் நிச்சயமாக அங்கு ஏதோ சில விஷயங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்து தான் அந்த அணியில் இருந்து விலகி விட்டதாக கூறி இருக்கிறார்.
இது பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சாம்பியன்ஷிப் வென்றது நிச்சயம் அற்புதமான நேரம். அந்த அணிக்கு இருந்த ரசிகர்களும் மிகவும் அதிகம். அவர்கள் மைதானத்தை கொண்டாட்டத்தில் வைத்து இருந்தார்கள். அங்கு இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்பினேன்."
"ஆனால், ஐபிஎல் கோப்பை வென்றதற்கு பின்னர் அணியில் என்னை தக்க வைப்பது பற்றி பேசினார்கள். அதன் பின் சில மாதங்களுக்கு வீரர்களை தக்க வைப்பது பற்றி எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சரியான தகவல் தொடர்பு இல்லாததால் சமரசத்துடன் பிரிந்து விடலாம் என்ற முடிவை எடுத்தோம். இதுதான் அங்கு நடந்த விஷயம்."
"எனக்கு இது ஏமாற்றமாகவும் இருந்தது. சரியான தகவல் தொடர்பு இல்லை என்றால் நாம் என்ன செய்வது வீரர்களை தக்க வைப்பதற்கான கடைசி தேதிக்கு ஒரு வாரம் இருக்கும் போது
தான் உங்களுக்கு அது பற்றிய தகவல் சொல்லப்படுகிறது என்றால் நிச்சயமாக ஏதோ சரியாக நடக்கவில்லை. எனவே, நான் விலகும் முடிவை எடுக்க முடிவு செய்தேன். என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது நடந்தது." என்றார் ஸ்ரேயாஸ் ஐயர். 2025 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications