பெங்களூர்: யுஸ்வேந்திர சாஹல்தான் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பாராட்டியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் மிகச் சிறப்பாக பந்து வீசினார். மழையின் காரணமாக 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், சாஹல் 3 ஓவர்கள் வீசி 11 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சாஹலின் பந்துவீச்சு குறித்துப் பாராட்டினார். சாஹலின் பந்துவீச்சு எப்படி கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக இருக்கிறது என்பது பற்றி கூறினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் யுஸ்வேந்திர சாஹலின் செயல்பாடு சற்றே சுமாராக இருந்தது. அவரால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை, அதே சமயம் ரன்களையும் அதிகமாக வழங்கி வந்தார். ஆனால், கடந்த சில போட்டிகளாக அவரது பந்துவீச்சில் பெரிய மாற்றம் தெரிகிறது. அவர் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார், ரன்களையும் குறைவாக விட்டுக்கொடுத்து வருகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதற்கு முந்தைய ஐந்து போட்டிகளில் அவர் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். தற்போது, கொல்கத்தாவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இதுக் குறித்து பேசியதாவது, "நான் சாஹலுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன். 'நீங்கள் ஒரு மேட்ச் வின்னர். எங்களுக்கு முடிந்தவரை விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் தற்காப்பு ஆட்டம் ஆட வேண்டிய அவசியமில்லை. உங்கள் அணுகுமுறை தற்காப்பு ரீதியாக இருக்க வேண்டாம்' என்று கூறினேன். அவர் நிச்சயமாக ஃபார்முக்கு திரும்புவார் என நாங்கள் நம்பினோம். ஒரு லெக் ஸ்பின்னராக அவர் இதைத்தான் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான். அதை நாம் எப்போதும் ஆதரிக்க வேண்டும்" என்றார்.