மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பஞ்சாப் அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் வாங்கப்பட்டார்.இந்த சூழலில் அந்த அணியில் புதிய கேப்டனாக அதிகாரப்பூர்வமாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார்.
ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வென்ற எட்டு கேப்டன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் ஸ்ரேயாஸ் ஐயர், பயிற்சியாளரும், கேப்டனும் தான் அணி தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கேகேஆர் அணியில சிஇஓ முக்கிய முடிவு எடுப்பதால் தான் அந்த அணியை விட்டு ஸ்ரேயாஸ் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், ஸ்ரேயாஸ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நேர்காணலில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் கோப்பை என்பது மிகவும் கனமாக இருக்கும். போட்டோ ஷூட் நடத்துவதற்காக அவர்கள் வழங்கிய போலி ஐபிஎல் கோப்பை கூட பெரிய அளவு எடை இருக்காது. ஆனால் உண்மையான ஐபிஎல் கோப்பை ஏழு முதல் 10 கிலோ வரை எடை இருக்கும். அதனை நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் போது மகாராணியின் வைர நகைகளை நீங்கள் பிடித்திருப்பது போல் உங்களுக்கு தோன்றும்.
ஐபிஎல் தொடரை வென்ற 8 கேப்டன்களில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. இந்த பயணம் எனக்கு ஒரு ரோலர் கோஸ்ட் ரைடு போல் இருந்தது. எனக்கு எதுவும் சுலபமாக அமையவில்லை. எனக்கு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது தான் பிடிக்கும். தோற்பது என்பது எனக்கு பிடிக்காது.
இதனால் தான் நான் கேப்டனாக முன்னேறி இருக்கிறேன் என்று நினைக்கின்றேன். நான் ஐபிஎல் ஏலத்தில் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை. ஏலத்தின் போது பணம் மேலே எகிற எகிற என்னால் தொலைக்காட்சி முன் அமர முடியவில்லை. நான் பாத்ரூமுக்கு ஓடி விட்டேன்.
ஒரு அணியில் முடிவு எடுக்க வேண்டியது கேப்டன் பயிற்சியாளர் மட்டும்தான். கேப்டனாக நான் என்னுடைய வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அணியின் வெற்றிக்காக அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். களத்திற்கு சென்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். பொறுப்புகளை அனைவரும் சரிசமமாக பிரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காக ஒருவரை ஒருவர் பழி சுமத்த கூடாது. பாண்டிங் பயிற்சியாளராக இருந்தபோது நான் அவரிடம் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் வீரர்களுக்கு எப்போதும் சுதந்திரம் வழங்குவார். என்னைப் பொறுத்தவரை நானும் கேப்டனாக அப்படித்தான் இருப்பேன். வீரர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்ய அனுமதி அளிப்பேன்.
ஆனால் வெளியில் இருந்து பார்க்கும்போது நான் சில வீரர்களுக்கு மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன் என்பது போல் தோன்றும். ஆனால் அப்படி கிடையாது. நான் அனைவரையும் சமமாக தான் பார்ப்பேன். அணிக்கு வெற்றியை தேடி தர வேண்டும் என்ற உத்வேகம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு கேப்டனாக தடுமாறும் வீரர்களுக்கு முழு ஆதரவு அளிப்பேன்.
அப்போதுதான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். ஒரு கேப்டனாக சில விஷயங்களில் சுதந்திரமாக முடிவெடுக்க எனக்கு பிடிக்கும். ஆனால் அதே சமயம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு என்னுடைய வீரர்கள் பயிற்சியாளர்களிடம் நான் கலந்து ஆலோசிப்பேன்.
ஏனென்றால் இது ஒரு அணி விளையாட்டு. அனைவரின் பங்களிப்பும் வெற்றிக்கு முக்கியம். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். போட்டி 9 மணிக்கு காலையில் தொடங்குகிறது என்றால் நீங்கள் இரவு முன்கூட்டியே படுக்கை அறைக்கு செல்ல வேண்டும். அடிப்படை விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.