கொல்கத்தா: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி 55 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். இது அவரது 12வது டி20 போட்டி ஆட்டநாயகன் விருதாகும். இதன் மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 25 வயதில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார். விராட் கோலியின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கிறார்.

25 வயது வரை விராட் கோலி 157 டி20 போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். தற்போது சுப்மன் கில், 25 வயதில் 153 டி20 போட்டிகளில் விளையாடி 12 ஆட்டநாயகன் விருதுகளை வென்று இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கிறார். அவர் தனது 25 வயதில் 129 டி20 போட்டிகளில் விளையாடி 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருந்தார். அபிஷேக் சர்மா 139 டி20 போட்டிகளில் விளையாடி 9 ஆட்டநாயகன் விருதுகளையும், ரோகித் சர்மா 149 டி20 போட்டிகளில் விளையாடி 9 ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் 90 ரன் எடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் மற்றொரு மோசமான சாதனையையும் சுப்மன் கில் செய்தார். அதாவது, ஐபிஎல் தொடரில் 90களில் அதிக முறை ஆட்டமிழந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் கே.எல். ராகுலுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
இவர்கள் மூவரும் ஐபிஎல் தொடரில் தலா இரண்டு முறை 90 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அவர் மூன்று முறை 90 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
வெளிநாட்டு வீரர்களில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டேவிட் வார்னர் தலா மூன்று முறை 90களில் ஆட்டமிழந்துள்ளனர். கிறிஸ் கெய்ல் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகிய இருவரும் தலா இரண்டு முறை 90களில் ஆட்டமிழந்துள்ளனர்.