வைபவ் மீது ஈகோ.. இந்திய அணியில் இடம் போய்விடும் என்ற பயம்.. கில்லை விளாசிய அஜய் ஜடேஜா, ரசிகர்கள்
ஜெய்ப்பூர்: வைபவ் சூர்யவன்சி மீது, இந்திய அணியின் துவக்க வீரரும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுமான சுப்மன் கில்லுக்கு பொறாமை மற்றும் பயம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும், சுப்மன் கில், வைபவ் சூர்யவன்சி பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசியதை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கண்டித்துள்ளார்.
14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி, டி20 வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக சதத்தை அடித்ததுடன், மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையையும் செய்தார். அவரது ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பிரையன் லாரா, குமார் சங்ககாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளி உள்ளனர்.

ஆனால், இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், அவரது சதத்தைப் பற்றி போட்டிக்கு பிறகு பேசும்போது 'அதிர்ஷ்டம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதைதான் அஜய் ஜடேஜா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டியது. இந்த போட்டிக்குப் பிறகு சுப்மன் கில்லிடம் வைபவ் சூர்யவன்சியின் ஆட்டம் பற்றி கேட்கப்பட்டது. அதுவரை அவர் போட்டியை பற்றி பேசும்போது, எந்த இடத்திலும் வைபவ் சூர்யவன்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்ததை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு ரவி சாஸ்திரி மற்றும் டேரன் கங்கா இரண்டு முறை வைபவ் சூர்யவன்சியின் ஆட்டம் குறித்து சுப்மன் கில்லிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மழுப்பும் வகையிலேயே பேசிய சுப்மன் கில், ஒரு கட்டத்தில், 'இன்று வைபவ் சூர்யவன்சியின் அதிர்ஷ்ட நாள். தனது நாளை அவர் முற்றிலுமாக பயன்படுத்திக் கொண்டார். அவர் ஆடிய அதிரடி ஆட்டம் நன்றாக இருந்தது,' என்றார். அதாவது, ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் வைபவ் சூர்யவன்சி இன்று நன்றாக விளையாடிவிட்டார், தொடர்ந்து அவரால் இதுபோல விளையாட முடியாது என்கிற ரீதியில் சுப்மன் கில் இவ்வாறு பேசியிருந்தார்.
இது குறித்து உடனடியாக நேரலை விவாதத்தில் பேசிய அஜய் ஜடேஜா தனது விமர்சனத்தை முன்வைத்தார். "இதை செய்வதற்கு 14 வயது வீரர் தன் மீது தானே நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தால் இத்தனை தூரம் வந்திருக்க முடியும்? ஆனால் யாரோ ஒரு வீரர் தொலைக்காட்சியில் வந்து, 'ஓ, இது அவரது அதிர்ஷ்ட நாள்' என்கிறார்."
"நாம் அனைவரும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நாம் கிரிக்கெட்டில் என்ன சாதிக்க வேண்டும் என கனவு கண்டு இருக்கிறோம். வீட்டில் விளையாடினாலும், நண்பர்களுடன் விளையாடினாலும், 14, 15 வயதில் நாம் பெரிதாக எதையோ கனவு கண்டு இருப்போம். ஆனால் இப்படி ஒரு ஆட்டம் விளையாட வேண்டும் என்பதைத்தான் நாம் உண்மையில் கனவு கண்டு இருக்க வேண்டும். ஒரு பையன் இங்கே தனது கனவை வாழ்ந்து கொண்டு இருக்கிறான். அது மிகவும் சக்தி வாய்ந்தது." என்றார் அஜய் ஜடேஜா.
மேலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சுப்மன் கில்லின் பேச்சையும், நடவடிக்கையையும் சுட்டிக்காட்டி, அவருக்கு வைபவ் சூர்யவன்சி மீது பொறாமை இருப்பதாகவும், இந்திய அணியில் தனது இடம் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications