மும்பை: ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஜூலை மாத இறுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அணிகளின் உரிமையாளர்களும் வெவ்வேறு கருத்துகளை முன் வைத்த சூழலில், இறுதி முடிவை பிசிசிஐ எப்போதும் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆர்டிஎம் மற்றும் ரீடென்ஷன் எப்படி அமையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், ஐபிஎல் தொடரின் பின்பற்றப்படும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த விதிகளில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று இரு அம்சங்களும் உள்ளன. இந்த விதியால் இந்தியாவில் ஆல்ரவுண்டர்களின் தேவை குறையும். அதேபோல் இளம் வீரர்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.

இன்னொரு பக்கம் ஒளிபரப்பாளர்களின் கருத்தையும் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒளிபரப்பாளர்களும் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் பிசிசிஐ நிர்வாகியான எனக்கு அனைத்தையும் விட கிரிக்கெட் தான் முக்கியம். இதுகுறித்து இன்னும் சில நாட்களில் இறுதி முடிவை எடுப்போம்.
ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்திலேயே மெகா ஏலம் தொடர்பாக அனைத்து கருத்துக்களும் பெறப்பட்டன. இனி பிசிசிஐ மற்றும் நிர்வாகிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுவிட்டது. இன்னும் சில சிறிய விஷயங்கள் குறித்தும் பார்க்க வேண்டியுள்ளது. சில அணிகள் தரமான வீரர்களை கொண்டுள்ளதால், மெகா ஏலமே தேவையில்லை என்று கூறி வருகின்றனர்.
ஆனால் அணியை கட்டமைக்காத உரிமையாளர்கள், கண்டிப்பாக மெகா ஏலம் வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர். பிசிசிஐ பொறுத்தவரை கன்சிஸ்டன்சி முக்கியம் தான். ஆனால் சில நேரங்களில் கலைத்து போட்டு மீண்டும் தொடங்கும் போது அதன் சுவாரஸ்யம் உச்சத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடையதாக எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசுகையில், நாம் இரு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளோம். ஐபிஎல் தொடரில் விளையாடுவதால், அந்த போட்டிக்கான பயிற்சியை நாம் தாமதமாக தொடங்கவில்லை. இனி இரண்டிற்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.