IPL 2025: 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சன்ரைசர்ஸ்.. நடப்பு சாம்பியன் KKR-க்கு மோசமான தோல்வி
டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி 6 ஆம் இடத்துடன் நிறைவு செய்து இருக்கிறது.
14 போட்டிகள் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஆறு போட்டிகளில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் போதும் போதும் என்ற அளவுக்கு சன்ரைசர்ஸ் வீரர்கள் ரன் விருந்தை ரசிகர்களுக்கு வழங்கினர்.

கடைசி போட்டியில் எப்படியாவது 300 ரன்கள் எடுக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் வீரர்கள் இன்று விளையாடினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்சர்கள்,6 பவுண்டரிகள் அடங்கும். இது எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஹென்றிச் கிளாசன் இன்னிங்ஸ் அமைந்தது.
ஹைதராபாத் அணியில் அதிக விலைக்கு தான் ஏன் வாங்கப்பட்டேன் என்பதை தனது பேட்டிங் மூலம் கிளாசன் நிரூபித்து காட்டினார். 17 பந்துகளில் அரைசதம் விளாசிய கிளாசன் 37 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இதில் ஏழு பவுண்டரியும், ஒன்பது சிக்ஸரும் அடங்கும்.
இறுதியில் இசான் கிஷன் 29 ரன்களும், அன்கீட் வர்மா 12 ரன்களும் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் 7.2 ஓவர்களில் 100 ரன்களும் 10.3 ஓவரில் 150 ரன்களும், 14.4 ஓவரில் 200 ரன்களும் அடிக்கப்பட்டது.
இதனால் முதல்முறையாக 300 ரன்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சன்ரைசஸ் அந்த வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச மூன்றாவது ஸ்கோர் இதுவாகும். இதனை அடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.
தொடக்க வீரர் சுனில் நரைன் அபாரமாக விளையாடினாலும், 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயிண்டன் டிகாக் 13 பந்துகளில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார். ரஹானே 15 ரன்களில் வெளியேற, ஆங்கிரிஸ் ரகுவன்சி 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதிரடி வீரரான ரிங்கு சிங் 9 ரன்கள் வெளியேறினார். ஒரு கட்டத்தில் மனிஷ் பாண்டே மட்டும் தனி ஆளாக நின்று போராடி மூன்று சிக்சர் இரண்டு பவுண்டரி என 23 பந்துகளின் 37 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 5 பந்துகளில் 13 ரன்களும் ஹர்ஷித்ராணா 21 பந்துகளின் 34 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்ற ஆடவில்லை.
இதனால் 18 புள்ளி நான்கு ஓவரில் கொல்கத்தா அணி 168 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சு தரப்பில் ஜெய்தேவ் உனாட்கட், இஷான் மலிங்கா மற்றும் ஹார்ஸ் டுபே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications