SRH vs RR: நாடி நரம்பெல்லாம் 300 ரன் அடிக்க வேண்டும் என்ற வெறி.. ராஜஸ்தானை கதிகலங்க வைத்த சன்ரைசர்ஸ்
ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மெகா ஸ்கோரை அடித்து அனைவரையும் மிரள வைத்தது. ஐபிஎல் வரலாற்றில் 300 ரன்களை அடித்து விட வேண்டும் என்ற வெறி கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அந்த ஸ்கோரை 14 ரன்களில் தவறவிட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

300 ரன்களை அடித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை எட்டியது. அந்த அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்களையும், அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன் 45 பந்துகளில் சதம் அடித்தார்.
இஷான் கிஷன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
ஹெய்ன்ரிச் கிளாஸன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி நேரத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பந்துகளை வீணடிக்க தயாராக இல்லை. அந்த அணியில் அபினவ் மனோகர் தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டம் இழந்திருந்தார். அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தனர். இது மிகவும் வியப்பை ஏற்படுத்தியது.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 286 ரன்களை எடுத்து இருந்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை. மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.
செய்தி சுருக்கம்:
- ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது.
- இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- டிராவிஸ் ஹெட் 31 பந்துகளில் 67 ரன்கள், அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தனர்.
- இஷான் கிஷன் 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது.


Click it and Unblock the Notifications